திருச்சி
ரூ.8¾ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்
|ரூ.8¾ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
செம்பட்டு:
துகள் வடிவில் தங்கம்
திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒரு பெண் பயணி தனது கையில் வைத்திருந்த அட்டைப்பெட்டியை மறைத்து எடுத்து வந்தது தெரிய வந்தது.
இதையறிந்த சுங்கத்துறை அதிகாரிகள் அந்த அட்டைப் பெட்டியை அவரிடம் இருந்து பெற்று சோதனை செய்தனர். அப்போது அதில், ரப்பர் வடிவில் உள்ள தாளில் தங்கத்தை ஸ்பிரே செய்து துகள் வடிவில் மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து சுங்கத்துறை அதிகாரிகள், அந்த பெண் பயணியிடம் விசாரணை நடத்தினர்.
பறிமுதல்
இதில் அவர் மங்களம் குறிச்சியை சேர்ந்த சோபியா(வயது 27) என்பதும், அவர் கடத்தி வந்தது 148 கிராம் தங்கம் என்பதும், அதன் மதிப்பு ரூ.8 லட்சத்து 70 ஆயிரம் என்பதும் தெரியவந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் தொடர்ந்து அந்த பயணியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.