< Back
மாநில செய்திகள்
கரூர் மாவட்டத்தில் 8 லட்சத்து 94 ஆயிரத்து 345 வாக்காளர்கள்
கரூர்
மாநில செய்திகள்

கரூர் மாவட்டத்தில் 8 லட்சத்து 94 ஆயிரத்து 345 வாக்காளர்கள்

தினத்தந்தி
|
5 Jan 2023 11:51 PM IST

கரூர் மாவட்டத்திற்கான இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் மொத்தம் 8 லட்சத்து 94 ஆயிரத்து 345 வாக்காளர்கள் உள்ளனர்.

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கரூர் மாவட்டத்தில் 2023-ம் ஆண்டிற்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு நிகழ்ச்சி அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரநிதிகள் முன்னிலையில் நடந்தது. இதில், மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான பிரபுசங்கர் கலந்து கொண்டு இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.

இதில், கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம் (தனி), குளித்தலை ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 4 லட்சத்து 30 ஆயிரத்து 275 ஆண் வாக்காளர்களும், 4 லட்சத்து 63 ஆயிரத்து 976 பெண் வாக்காளர்களும், 94 இதர வாக்காளர்களும் என மொத்தம் 8 லட்சத்து 94 ஆயிரத்து 345 வாக்காளர்கள் உள்ளனர்.

புதிதாக சேர்க்கப்பட்ட- நீக்கப்பட்டவர்கள்

அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் 1,414 ஆண் வாக்காளர்களும், 1,660 பெண் வாக்காளர்களும் என 3,074 புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர். அதேபோல் 1,393 ஆண் வாக்காளர்களும், 1,273 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 2,666 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

கரூர் சட்டமன்ற தொகுதியில் 2,561 ஆண் வாக்காளர்களும், 3,041 பெண் வாக்காளர்களும், 3 இதர வாக்காளர்கள் என மொத்தம் 5,605 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளனர். மேலும் 2,760 ஆண் வாக்காளர்களும், 2,8 53 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 5,613 நீக்கப்பட்டு உள்ளனர்.

கிருஷ்ணராயபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதியில் 1,858 ஆண் வாக்காளர்களும், 2,233 பெண் வாக்காளர்களும், 3 இதர வாக்காளர்களும் என 4,094 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டும், 1,677 ஆண் வாக்காளர்களும், 1,863 பெண் வாக்காளர்களும், 1 இதர வாக்காளர்களும் என மொத்தம் 3,541 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

குளித்தலை சட்டமன்ற தொகுதியில் 2,160 ஆண் வாக்காளர்களும், 2, 542 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 4,702 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டும், 1,921 ஆண் வாக்காளர்களும், 2,324 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 4,245 வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளனர்.

17,475 புதிய வாக்காளர்கள்

கரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும் 7,993 ஆண் வாக்காளர்களும், 9,476 பெண் வாக்காளர்களும், 6 இதர வாக்காளர்கள் என மொத்தம் 17,475 புதிய வாக்காளர்களாக சேர்க்கப்பட்டு உள்ளனர். அதேபோல் 7,751 ஆண் வாக்காளர்களும், 8,313 பெண் வாக்காளர்களும், 1 இதர வாக்காளர் என மொத்தம் 16,065 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

வாக்காளர் உதவி மையம்

இதையடுத்து மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பொதுமக்கள் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை பார்வையிட்டு, அவர்களது பெயர், புகைப்படம் மற்றும் இதர பதிவுகள் சரியாக உள்ளதா? என்பதை உறுதி செய்து கொள்ளலாம். வாக்காளர் படிவம் 6பிஐ வழங்கி தங்களது வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண்ணை இணைத்து கொள்ளலாம். கரூர் மாவட்டத்தில் வாக்காளர் அடையாள அட்டையுடன், 74 சதவீதம் ஆதார் எண்கள் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் வாக்காளர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு தீர்வு அளிக்கும் வகையில் கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் வாக்காளர் உதவி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வாக்காளர்கள் தங்களுக்கு தேவையான அனைத்து தகவல்கள், பின்னூட்டங்கள், ஆலோசனைகள் மற்றும் புகார்கள் ஆகியவற்றை 1950 என்ற கட்டணமில்லா எண்ணிற்கு அழைத்து தெரிவிக்கலாம். மேலும் www.nvsp.in என்ற இணையதளம் மூலமாகவும் voter help line என்ற செல்போன் செயலி மூலமாகவும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து பொது சேவை மையங்களிலும் சேர்த்தல் நீக்கல் மற்றும் திருத்தம் தொடர்பான விண்ணப்பங்களை பதிவு செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்