சேலம்
வனவர்கள் 8 பேர் பணி இடமாற்றம்
|ஏற்காடு பகுதியில் வனவர்கள் 8 பேர் பணி இடமாற்றம் செய்யப்பட்டனர்.
சேலம் மாவட்டம் ஏற்காடு ஏரி பகுதியில் வனத்துறை சார்பில் வனவர்கள் வெங்கடேசன், சிவக்குமார் ஆகியோர் பனை வெல்லம் விற்பனை நிலையம் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு நெடுஞ்சாலைத்துறை ஆய்வாளர் ரமேஷ், நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் பனை வெல்லம் அமைக்கும் பணியில் ஏன் ஈடுபட்டுக்கொண்டு உள்ளீர்கள் என்று கேட்டு உள்ளார். இதில் இவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. குடிபோதையில் தகராறில் ஈடுபட்டதாக நெடுஞ்சாலைத்துறை ஆய்வாளர் ரமேஷ் புகார் தெரிவித்தார். இதையடுத்து வனத்துறை சார்பில் வனவர்கள் 2 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில் வனவர்கள் வெங்கடேசன், சிவக்குமார் ஆகிய 2 பேர் மேட்டூர் வனச்சரகத்திற்கு மாற்றப்பட்டு உள்ளனர்.
மேலும் நிர்வாக காரணங்களுக்காக சேலம் சமூக காடுகள் பிரிவில் பணியாற்றிய தமிழரசன், சஞ்சய் ஆகியோர் ஏற்காடு வனச்சரகத்திற்கும், ஏற்காடு சமூக காடுகள் பிரிவில் பணியாற்றிய அருணாச்சலம் எடப்பாடிக்கும், எடப்பாடியில் பணியாற்றிய சக்திவேல் ஏற்காட்டிற்கும், குரும்பப்பட்டி பூங்காவில் பணியாற்றிய ராமசாமி, மேட்டூருக்கும், மேட்டுப்பாளையத்தில் பணியாற்றிய சுரேஷ் குரும்பப்பட்டிக்கும பணி இடமாற்றம் செய்து சேலம் வன அலுவலர் கவுதம் உத்தரவிட்டு உள்ளார்.