திண்டுக்கல்
சாலையில் சுற்றித்திரிந்த 8 மாடுகள் பறிமுதல்
|பழனியில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் சுற்றித்திரிந்த மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டது
பழனி நகரில் திண்டுக்கல் ரோடு, தாராபுரம் ரோடு, பொள்ளாச்சி ரோடு ஆகியவை போக்குவரத்து அதிகம் உள்ள சாலைகள் ஆகும். இந்த சாலைகளில் மாடுகள் சுற்றித் திரிவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதையடுத்து பழனியில் உள்ள சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிந்தால் அவை பறிமுதல் செய்யப்படுவதோடு உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று நகராட்சி நிர்வாகம் அறிவித்தது.
இந்நிலையில் நேற்று திண்டுக்கல் ரோட்டில் போக்குவரத்துக்கு இடையூறாக மாடுகள் சுற்றித்திரிவதாக நகராட்சி அதிகாரிகளுக்கு புகார் வந்தது. அதையடுத்து ஆணையர் பாலமுருகன் உத்தரவின் பேரில் நகராட்சி பணியாளர்கள் திண்டுக்கல் ரோடு பகுதிக்கு சென்றனர். பின்னர் சாலையில் சுற்றித்திரிந்த 8 மாடுகளை பறிமுதல் செய்தனர். பின்னர் அவை உழவர் சந்தை பகுதியில் உள்ள நகராட்சி பூங்காவில் கட்டி வைக்கப்பட்டது.