திருச்சி
தொடர்ந்து 8 மணி நேரம் சிலம்பம் சுற்றி மாணவி சாதனை
|தொடர்ந்து 8 மணி நேரம் சிலம்பம் சுற்றி மாணவி சாதனை படைத்தார்.
உழைப்பாளர் தினத்தையொட்டி திருச்சி தில்லைநகரில் உள்ள பள்ளி வளாகத்தில் தொடர்ந்து சிலம்பம் சுற்றி சாதனை படைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதன்படி பள்ளி மாணவி சுகித்தா இடைவிடாமல் தொடர்ந்து 8 மணி நேரம் சிலம்பம் சுற்றி புதிய உலக சாதனை படைத்தார். அவருடன் திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமாரின் மகன்கள் மித்ரன் மற்றும் பிரஜன் ஆகியோரும் சிலம்பம் சுற்றி சாதனை படைத்தனர். இந்த மூவரின் சாதனை துபாயில் இயங்கி வரும் ஐன்ஸ்டன் உலக சாதனை புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டது. மேலும் அமெரிக்க உலக சாதனை புத்தகத்தில் இடம் பெறுவதற்காக 280-க்கும் மேற்பட்ட சிலம்ப வீரர்-வீராங்கனைகள் சுழற்சி முறையில் ஒரு குழுவிற்கு 40 பேர் என 7 குழுவாக தலா ஒரு மணி நேரம் சிலம்பம் சுற்றியும் சாதனை படைத்தனர். இதில் சிறப்பு விருந்தினராக கலெக்டர் பிரதீப்குமார் கலந்து கொண்டு சாதனை படைத்தவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் உலக சிலம்ப இளையோர் சம்மேளன தலைவர் மோகன், துணைத் தலைவர் ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.