< Back
மாநில செய்திகள்
கடலூர் அருகே நள்ளிரவில் 8 படகுகளுக்கு தீ வைப்பு - போலீசார் தீவிர விசாரணை
மாநில செய்திகள்

கடலூர் அருகே நள்ளிரவில் 8 படகுகளுக்கு தீ வைப்பு - போலீசார் தீவிர விசாரணை

தினத்தந்தி
|
13 March 2023 9:35 AM IST

கடலூர் அருகே நள்ளிரவில் 8 படகுகளுக்கு தீ வைக்கப்பட்டது.

கடலூர்,

கடலூர் அடுத்த துறைமுகம் அக்கரை கோரி பகுதியில் தினமும் மீனவர்கள் தங்கள் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி விட்டு செல்வார்கள். இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி விட்டு வீட்டிற்கு சென்றனர். நேற்று நள்ளிரவு அக்கரை கோரி பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் திடீரென்று எரிய தொடங்கியது.

இதனை தொடர்ந்து வரிசையாக நிறுத்தப்பட்டிருந்த படகுகள் ஒவ்வொன்றிலும் தீ பரவி கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் அப்பகுதியில் இருந்த பொதுமக்களிடம் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து ஊர் பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் ஏராளமானோர் அப்பகுதியில் திரண்டு கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த பைபர் படகுகளை தண்ணீர் ஊற்றி நீண்ட நேரம் போராடி அணைத்தனர்.

பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் நீண்ட நேரம் முயற்சி செய்து தீயை அணைத்த போதிலும் 8 பைபர் படகுகள் மற்றும் மீன்பிடி வலைகள் எரிந்து சேதமானது. இது பற்றிய தகவல் அறிந்த கடலூர் துறைமுகம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயில் கருகி எரிந்த படகுகள் மற்றும் வலைகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதில் அக்கரை கோரி கிராமத்தை சேர்ந்த ரஞ்சித், குப்புசாமி, அன்பு, மேகநாதன், பாலமுருகன், பவலேஷ், சாமிநாதன், மகேந்திரன் ஆகிய 8 பேரின் பைபர் படகுகள் மற்றும் வலைகள் எரிந்தது தெரிய வந்துள்ளது.

மர்மநபர்கள் படகுகளை தீ வைத்து எரித்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தீ விபத்தில் லட்சக்கணக்கான மதிப்பில் படகுகள் மற்றும் வலைகள் எரிந்ததால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் கேள்விக்குறியாக உள்ளது. இது குறித்து கடலூர் துறைமுகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பைபர் படகுகள் மற்றும் வலைகளுக்கு தீ வைத்த மர்மநபர்கள் யார்? முன் விரோதம் காரணமாக தீ வைத்தார்களா? என தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே கடலூர் கலெக்டர் அலுவலகம் எதிரில் தாழங்குடாவை சேர்ந்த 3 மீனவர்கள் தென்பெண்ணையாறு கரையோரம் தங்கள் படகுகள் மற்றும் வலைகளை பாதுகாப்பாக நிறுத்தி வைத்து சென்றபோது இதே போல் மர்மநபர்கள் படகுகள் மற்றும் வலைகளுக்கு தீ வைத்து எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தற்போது நள்ளிரவில் அக்கரை கோரி பகுதியில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டு இருந்த பைபர் படகுகளில் மர்மநபர்கள் தீ வைத்து எரித்த சம்பவம் மீனவர்கள் கிராமத்தில் இடையே கடும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் நூற்றுக்கணக்கான மீனவர்கள் அப்பகுதியில் தொடர்ந்து திரண்டு வருவதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதோடு பதட்டமான சூழ்நிலையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்