செங்கல்பட்டு
தனியார் பல்கலைக்கழகம் அருகே சிகரெட் விற்ற 8 பேர் கைது
|மறைமலை நகர் தனியார் பல்கலைக்கழகம் அருகே சிகரெட் விற்ற 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட தனியார் பல்கலைக்கழகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் சிகரெட் பாக்கெட்டுகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து பொத்தேரியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தை சுற்றி உள்ள கடைகளில் போலீசார் ஆய்வு செய்தபோது சிகரெட் பாக்கெட்டுகள் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் சிகரெட் பாக்கெட்டுகளை கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்த பொத்தேரி பகுதியை சேர்ந்த ராமசுப்பு (வயது 52), சாய் மீரசாந்த் (26), கன்னியப்பன் (50), செல்வம் (48), விஸ்வநாதன் (37), கோவர்த்தனன் (47), தருண் (22), தயாளன் (50) ஆகியோரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து தடை செய்யப்பட்ட சிகரெட் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
இது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.