< Back
மாநில செய்திகள்
சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வை 7,943 பேர் எழுதுகின்றனர்
விழுப்புரம்
மாநில செய்திகள்

சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வை 7,943 பேர் எழுதுகின்றனர்

தினத்தந்தி
|
23 Jun 2022 7:41 PM IST

விழுப்புரம் மாவட்டத்தில் நாளை, நாளை மறுநாள் நடைபெறும் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வை 7,943 பேர் எழுதுகின்றனர்.

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டத்தில் இந்த எழுத்துதேர்வு விழுப்புரம் ஏழுமலை தொழில்நுட்ப கல்லூரி, அரசு சட்டக்கல்லூரி, விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி, வி.ஆர்.பி. மேல்நிலைப்பள்ளி, ராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி, அரசூர் வி.ஆர்.எஸ். பொறியியல் கல்லூரி ஆகிய 6 தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது.

7,943 பேர் எழுதுகின்றனர்

இத்தேர்வை 6,340 ஆண்களும், 1,603 பெண்களும் என மொத்தம் 7,943 பேர் எழுதுகின்றனர். நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் 12.30 மணி வரை பொது எழுத்துத்தேர்வு நடைபெற உள்ளது. தேர்வர்கள், சம்பந்தப்பட்ட தேர்வு மையங்களில் காலை 8.30 மணிக்குள் இருத்தல் வேண்டும். தொடர்ந்து நாளை மாலை 3.30 மணி முதல் 5.10 மணி வரை தமிழ் மொழிக்கான தகுதித்தேர்வு நடக்கிறது. இத்தேர்வுக்கு மதியம் 2 மணிக்குள் இருக்க வேண்டும். நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி தேர்வு மையத்தில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ள துறை ரீதியான பொது எழுத்துத்தேர்வில் காவல்துறையை சேர்ந்த 276 பேர் எழுத உள்ளனர். இத்தேர்வு எழுதுபவர்கள் சம்பந்தப்பட்ட தேர்வு மையத்தில் காலை 8.30 மணிக்குள் இருக்க வேண்டும்.

முகக்கவசம் கட்டாயம்

தேர்வு எழுத வரும் தேர்வர்கள் கண்டிப்பாக தேர்வு நுழைவுச்சீட்டு கொண்டு வர வேண்டும். அதுமட்டுமின்றி பந்துமுனை பேனா, தேர்வு எழுதும் அட்டை ஆகியவற்றை கொண்டு வர வேண்டும். இதைத்தவிர கைப்பை, செல்போன், எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் போன்றவற்றை தேர்வு மையங்களுக்கு கொண்டு வரக்கூடாது. முகக்கவசம் கட்டாயம் அணிந்து வர வேண்டும். தேர்வுக்கான நுழைவுச்சீட்டை https://tnusrb.tn.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் தங்களது USER ID மற்றும் password மூலம் உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இத்தேர்வையொட்டி மேற்கண்ட தேர்வு மையங்களில் அனைத்து முன்னேற்பாடு பணிகளும் செய்யப்பட்டு வருகிறது.

இந்த தகவல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்