விருதுநகர்
மதுரை-தூத்துக்குடி அகல ெரயில் பாதை திட்டப்பணிக்கு நிலம் கையகப்படுத்த 78 அலுவலர்கள் நியமனம்
|மதுரையிலிருந்து அருப்புக்கோட்டை வழியாக தூத்துக்குடி வரையிலான அகல ெரயில் பாதை திட்டப்பணி கைவிடப்படும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது தமிழக அரசு இத்திட்டப் பணிக்கான நிலம் கையகப்படுத்த அலுவலர்களை நியமித்து உத்தரவிட்டுள்ளது.
மதுரையிலிருந்து அருப்புக்கோட்டை வழியாக தூத்துக்குடி வரையிலான அகல ெரயில் பாதை திட்டப்பணி கைவிடப்படும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது தமிழக அரசு இத்திட்டப் பணிக்கான நிலம் கையகப்படுத்த அலுவலர்களை நியமித்து உத்தரவிட்டுள்ளது.
அகல ெரயில் பாதை
மதுரையில் இருந்து அருப்புக்கோட்டை வழியாக தூத்துக்குடி வரையிலான 144 கிலோ மீட்டர் அகர ெரயில் பாதை திட்டப்பணிக்கு கடந்த 2008-ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்ட நிலையில் மீளவிட்டானில் இருந்து 18 கிலோ மீட்டர் அகல ெரயில்பாதை திட்ட பணி முடிவடைந்த நிலையில் ெரயில்வே பாதுகாப்புஆணையர் ஆய்வு செய்து சான்று அளித்துள்ளார்.
இந் நிலையில் இந்த ெரயில் பாதை பொருளாதார ரீதியாக லாபகரமாக இருக்காது என்ற காரணத்தை கூறி ெரயில்வே வாரியம் திட்டத்தை கைவிட முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மாணிக்கம் தாகூர் எம்.பி. இத்திட்டத்தை கைவிடக்கூடாது என்று மத்திய ெரயில்வே மந்திரிக்கும், பிரதமருக்கும் கடிதம் எழுதினார்.
நியமனம்
மேலும் மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை இத்திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளதாக விருதுநகரில் தெரிவித்தார். இந்தநிலையில் தமிழக அரசு இந்த அகல ெரயில் பாதை திட்டப்பணிக்கு நிலம் கையகப்படுத்த 78 அலுவலர்களை நியமிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
அருப்புக்கோட்டை, காரியாபட்டி தாலுகாவில் வேலாயுதபுரம் உள்ளிட்ட 22 கிராமங்களிலும், திருப்பரங்குன்றம், கள்ளிகுடி தாலுகாவில் 11 கிராமங்களிலும், நிலையூரிலும் தனியார் நிலங்கள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொள்ள விருதுநகர் மாவட்டத்திற்கு 52 அலுவலர்களையும், மதுரை மாவட்டத்திற்கு 26 அலுவலர்கனையும் நியமிக்க அனுமதி அளித்து தமிழக அரசின் வருவாய் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்தர்ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
இதில் தனி தாசில்தார்கள், வருவாய் ஆய்வாளர்கள் ஆகியோரும் ஒப்பந்த அடிப்படையில் சிறப்பு சர்வே ஆய்வாளர்கள், டிராப்ட்ஸ்மென், கம்ப்யூட்டர் ஆபரேட்டர், அலுவலக உதவியாளர், களப்பணியாளர் ஆகியோரும் நியமிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கான நிர்வாக செலவினை தென்னக ெரயில்வே செலுத்தி விடும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இத்திட்ட பணிக்காக விருதுநகர் மாவட்டத்தில் 287.08 எக்டேர் தனியார் பட்டா நிலங்களும், 34.47 எக்டேர் அரசு புறம்போக்கு நிலமும், மதுரை மாவட்டத்தில் 50.93 எக்டேர் தனியார் நிலங்களும், 26.55 எக்டேர் அரசு புறம்போக்கு நிலமும் கையகப்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உறுதி
இதன் மூலம் மதுரையில் இருந்து அருப்புக்கோட்டை வழியாக தூத்துக்குடி வரையிலான அகல ெரயில் பாதை திட்டப்பணி நிறைவேற்றப்படும் என்பது உறுதியாகி உள்ளது.