< Back
மாநில செய்திகள்
7,742 பேர் சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதுகின்றனர்
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்

7,742 பேர் சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதுகின்றனர்

தினத்தந்தி
|
28 May 2023 12:45 AM IST

7,742 பேர் சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதுகின்றனர்

கோவை

கோவையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் சிவில் சர்வீசஸ் தேர்வை 7,742 பேர் எழுதுகின்றனர். இதற்காக 18 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

சிவில் சர்வீசஸ் தேர்வு

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் சிவில் சர்வீசஸ் தேர்வுகள் நடத்தப்படுகிறது. இதில் முதல்நிலை தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாடு முழுவதும் நடைபெற உள்ளது. கோவை மாவட்டத்தில் இந்த தேர்வை 7,742 பேர் எழுதுகின்றனர். இதற்காக மாவட்டம் முழுவதும் 18 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். உள்ளிட்ட மிக முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளுக்கான தேர்வு என்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. மேலும் இந்த தேர்வை கண்காணிக்க மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய மாவட்ட ஒருங்கிணைப்பு மேற்பார்வையாளர் மற்றும் மாவட்ட கலெக்டர் தலைமையில் 7 உதவி ஒருங்கிணைப்பு மேற்பார்வையாளர் தேர்வு கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

கண்காணிப்பாளர்கள்

இதுதவிர தாசில்தார் அந்தஸ்திலான அதிகாரிகள் 18 தேர்வு மையங்களுக்கும் தலா ஒருவர் நியமிக்கப்பட்டு தேர்வு மையம் கண்காணிக்கப்படும். இவர்கள் தவிர துணை தாசில்தார் அந்தஸ்திலான 39 தேர்வு மைய உதவி கண்காணிப்பாளர்கள், 341 அறை கண்காணிப்பாளர்கள் மாவட்ட நிர்வாகத்தின் மூலமும், மேலும் 341 அறை கண்காணிப்பாளர்கள் தேர்வு மையம் மூலம் என 682 அறை கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

ஒவ்வொரு தேர்வு மையத்திலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

தேர்வு நடைபெறும் அனைத்து மையங்களிலும் செல்போன் ஜாமர்கள் நிறுவப்பட்டு உள்ளன. மேலும் தடையில்லா மின்சார வசதியும் தேர்வு மையங்களுக்கு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. உக்கடம், கவுண்டம்பாளையம், சிங்கால்லூர், சூலூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து தேர்வு மையங்களுக்கு போதிய பஸ்வசதி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

தேர்வர்கள் அனைவரும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் வழங்கப்பட்ட நுழைவு சீட்டுடன் அதில் குறிப்பிடப்பட்டு உள்ள நேரத்திற்குள் வர வேண்டும்.

மேற்கண்ட தகவலை கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்