திருச்சி
ஜல்லிக்கட்டில் 765 காளைகள் சீறிப்பாய்ந்தன; 20 பேர் காயம்
|துவாக்குடி கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 765 காளைகள் சீறிப்பாய்ந்தன. இதில் காளைகள் முட்டியதில் 20 பேர் காயம் அடைந்தனர்.
திருவெறும்பூர்,
ஜல்லிக்கட்டு
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் ஒன்றியத்திற்குட்பட்ட துவாக்குடி நகராட்சியில் உள்ள துவாக்குடி கிராமத்தில் ஜல்லிக்கட்டு விழா நேற்று நடைபெற்றது. இதனை திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். ஆர்.டி.ஓ. தவச்செல்வம், திருவெறும்பூர் தாசில்தார் ரமேஷ், திருவெறும்பூர் போலீஸ் துணைசூப்பிரண்டு (பொறுப்பு) ஜெயசீலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஜல்லிக்கட்டில் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 765 காளைகள் கலந்துகொண்டன.
20 பேர் காயம்
வாடிவாசலில் இருந்து ஆக்ரோஷமாக சீறிப்பாய்ந்த காளைகளில் பல காளைகள் மின்னல் வேகத்தில் சென்றன. சில காளைகள் களத்தில் நின்று தன்னை அடக்க வந்த வீரர்களை அருகில் நெருங்க விடாமல் மிரட்டின. இருப்பினும் பல காளைகளை 302 மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். சில காளைகள் வீரர்களை தூக்கி வீசி பந்தாடியது. அப்போது பொதுமக்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.
ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் திருவெறும்பூர் காவல்துறையை சேர்ந்த சதீஷ், துவாக்குடி தெற்கு மலையை சேர்ந்த ஜீவானந்தம் (வயது 22), தஞ்சை மாவட்டம் ராயமுண்டான்பட்டியை சேர்ந்த விவேக் (23) உள்பட 20 பேர் காயம் அடைந்தனர். பின்னர் அவர்களுக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.
மேலும் பரிசு பொருட்கள் தொடர்பாக விழா கமிட்டியினருக்கும், மாட்டின் உரிமையாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதேபோல் டோக்கன் முறையில் மாடுகள் விடாததால் மாட்டின் உரிமையாளர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஜல்லிக்கட்டு விழாவில் 150 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.