முதல்-அமைச்சர் காப்பீடு அட்டையைப் பெற்ற 7.62 லட்சம் குடும்பங்கள் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
|கலைஞர் நூற்றாண்டு மருத்துவ ஆராய்ச்சி மையம் அமைக்க இடம் தேர்வு செய்யும் பணி நிறைவடைந்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை,
சென்னை கிண்டியில் முதல்-அமைச்சரின் விரிவான காப்பீடு திட்ட பயனாளிகளை பதிவு செய்யும் சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது. இதை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆய்வு செய்தார். முகாமிற்கு வருகை தந்த மக்களுடன் மா.சுப்பிரமணியன் கலந்துரையாடினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் 100 கோடி ரூபாய் மதிப்பில் கலைஞர் நூற்றாண்டு மருத்துவ ஆராய்ச்சி மையம் அமைக்க இடம் தேர்வு செய்யும் பணி நிறைவடைந்துள்ளதாக தெரிவித்தார்.
கடந்த 2 ஆண்டுகளில் 7 லட்சத்து 62 ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்கள் முதல்-அமைச்சர் காப்பீடு அட்டையை புதிதாக பெற்றுள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன், முதல்-அமைச்சர் காப்பீடு அட்டையை பயன்படுத்துவது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய அமைக்கப்பட்ட குழு மக்களிடம் கருத்து கேட்க உள்ளதாக தெரிவித்தார்.