செங்கல்பட்டு
திருப்போரூர் அருகே முதியவரை கொன்று பிளாஸ்டிக் பீப்பாயில் அடைத்து வைத்த கொடூரம்
|திருப்போரூர் அருகே முதியவரை கொன்று பிளாஸ்டிக் பீப்பாயில் அடைத்து வைத்துள்ளனர்.
ஆண் பிணம்
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த ஆலத்தூர் யாதவர் தெருவில் தனியாக இருந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக திருப்போரூர் போலீசாருக்கு அந்த பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகதீஸ்வரன் மற்றும் திருப்போரூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது பூட்டிய அறையில் பிளாஸ்டிக் பீப்பாயில் அழுகிய நிலையில் ஆண் பிணம் இருப்பது தெரியவந்தது. அடித்து கொன்று பீப்பாயில் அடைத்து வைத்துள்ளனர். கொலை செய்யப்பட்டு 20 நாட்களுக்கும் மேல் ஆனதாக கூறப்படுகிறது. 50 லிட்டர் பீப்பாயில் உடலை தலைகீழாக வைத்து மேலே தலையணை போன்றவற்றை வைத்து அடைத்து வைத்துள்ளனர்.
போலீசார் விசாரணை
உடல் அழுகிய நிலையில் எலும்புகள் தனித்தனியாக பெயர்ந்து காணப்பட்டது. திருப்போரூர் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸ் விசாரணையில் விழுப்புரம் பகுதியை சேர்ந்த வளர்த்திகோயிலான் (வயது 70) மற்றும் அவரது மனைவி எழிலரசி (54) இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக ஆலத்தூர் பகுதியில் தங்கி அங்கு பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது. தற்போது அவரது மனைவி எழிலரசியை காணவில்லை.
போலீசார் எழிலரசியை தேடி வருகின்றனர். கொலையாளிகள் யார் என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.