75-வது சுதந்திர தினம் மற்றும் செஸ் ஒலிம்பியாட் போட்டி: சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஒத்திகை
|75-வது சுதந்திர தினம் மற்றும் செஸ் ஒலிம்பியாட் போட்டி காரணமாக சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.
ஆலந்தூர்,
இந்தியாவின் 75-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம் வருகிற ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது. அதேபோல் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற 28-ந் தேதி தொடங்கி ஆகஸ்டு 10-ந் தேதி வரை நடைபெற இருக்கிறது. அதில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்ள சென்னை வர உள்ளனர்.
இது தொடர்பாக சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் விமான பாதுகாப்பு படை, மத்திய தொழில் பாதுகாப்பு படை, விமான நிலைய உயர் அதிகாரிகள், அனைத்து விமான நிறுவன உயா் அதிகாரிகள் கலந்து கொண்ட சிறப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தமிழ்நாடு அரசு உள்துறை கூடுதல் செயலாளா் முருகன், சென்னை விமான நிலைய இயக்குனா் சரத்குமாா் உள்ளிட்ட உயா் அதிகாரிகளும் கலந்து கொண்டனா்.
பாதுகாப்பு ஒத்திகை
கூட்டத்தின் முடிவில் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தி, பயங்கரவாதிகளின் சதி செயல் மற்றும் விமான கடத்தல் போன்ற பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டால் அதை எப்படி சமாளித்து முறியடிப்பது? என்பது பற்றிய பாதுகாப்பு ஒத்திகை நடந்தது.
பயங்கரவாதிகள் விமான நிலையத்துக்குள் புகுந்து விமானத்தை கடத்த முயற்சிப்பது போலவும், அதை விமான நிலைய பாதுகாப்பு படை அதிகாரிகள், விமான பாதுகாப்பு அதிகாரிகள் ஒன்றிணைந்து முறியடித்து பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்தி விட்டு பயணிகளையும், விமானத்தையும் பத்திரமாக பாதுகாப்பது போன்றும் ஒத்திகை நடத்தப்பட்டது.
வழக்கமானதுதான்
இதனால் சென்னை விமான நிலையத்தில் பயணிகளிடையே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அது ஒத்திகைதான் என்று தெரிந்ததும் நிம்மதி அடைந்தனர்.
இது வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் ஒத்திகைதான். ஆனாலும் இந்த ஆண்டு சுதந்திர தின விழாவுடன், உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியும் நடப்பதால் கூடுதலான பாதுகாப்பு ஏற்பாடுகளும், தயார் நிலையில் இருப்பதை உறுதிப்படுத்தும் விதத்திலும் சென்னை விமான நிலையத்தில் ஒத்திகை நடந்தது என சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.