சென்னை
எத்திராஜ் மகளிர் கல்லூரி ஆங்கிலத்துறையின் 75-வது ஆண்டு விழா - தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. பங்கேற்பு
|எத்திராஜ் மகளிர் கல்லூரி ஆங்கிலத் துறையின் 75-வது ஆண்டு விழாவில், தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. பங்கேற்கிறார்.
சென்னை எழும்பூரில் உள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரி தனது 75-வது ஆண்டு விழாவை கொண்டாடி வருகிறது. அதன் ஒருபகுதியாக கல்லூரியின் ஆங்கிலத்துறையும் தனது 75-வது ஆண்டு விழாவை தனித்துவமான முறையில் கொண்டாட இருக்கிறது.
எத்திராஜ் கல்லூரியின் ஆங்கில இலக்கிய மன்றம் சார்பில் ஆங்கிலத்துறையின் 75-வது ஆண்டையொட்டி 'ஏத்தனா 2022' என்ற தலைப்பில் நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி எத்திராஜ் கல்லூரி வளாகத்தில் உள்ள கலையரங்கில் இன்று காலை 11.30 மணிக்கு நடக்க உள்ளது.
நிகழ்ச்சியை சிறப்பிக்கும் விதமாக ஆங்கிலத்துறையில் படித்து சாதித்த முன்னாள் மாணவிகளை அழைத்து கவுரவிக்க உள்ளனர். அதன்படி, முன்னாள் மாணவிகளான மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் கல்யாணி மதிவாணன், நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளனர்.
பெண்களுக்கு அதிகாரமளித்தல், பெண்களை முன்னேற்றுதல் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்ட 'வலிமை தமிழச்சி' என்ற திட்டத்தை இந்திய ஆங்கில மொழி ஆசிரியர் சங்கம், இந்தியா ரீட்ஸ் அமைப்பு, சென்னை ரோட்டரி கிளப் ஆகியவை மேற்கொண்டு வருகிறது.
இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக எத்திராஜ் மகளிர் கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற உள்ள நிகழ்ச்சியில், 'திறன் மேம்பாட்டு மையம்' தொடங்கி வைக்கப்பட இருக்கிறது. இதனை தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. தொடங்கி வைக்க இருக்கிறார். அதனைத்தொடர்ந்து தன்னுடைய வாழ்வில் நூலாசிரியராக அவருடைய பணி எப்படி இருந்தது?, அரசியல் பணியில் அவருடைய பணி எவ்வாறு சென்று கொண்டு இருக்கிறது? என்பது பற்றி மாணவிகளுடன், தமிழச்சி தங்கபாண்டியன் கலந்துரையாட இருக்கிறார்.
அதேபோல், எத்திராஜ் கல்லூரியில் படித்து, அதே கல்லூரியில் ஆங்கிலத்துறையில் பணியாற்றி, காமராஜர் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தராக இருந்த கல்யாணி மதிவாணனும் தன்னுடைய கல்லூரி கால படிப்பு, பயண அனுபவங்களை நிகழ்ச்சியில் பகிர்ந்து கொள்கிறார்.
முன்னதாக இந்த நிகழ்ச்சியில் ஆங்கிலத்துறையின் தலைவர் ஜெ.மங்கையர்க்கரசி வரவேற்புரையாற்றுகிறார். இதில் எத்திராஜ் கல்லூரி அறக்கட்டளை தலைவர் வி.எம்.முரளிதரன் தலைமை உரையாற்றுகிறார். கல்லூரி முதல்வர் (பொறுப்பு) டி.பி.உஷாராணி முன்னிலை வகிக்கிறார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாணவிகள் டீன் டி.புனிதவதி மற்றும் உதவி பேராசிரியர்கள் சோபியா ஆசாத், எஸ்.எஸ்.பங்கஜம், ஜெ.சரண்யா, பிரீத்தி, பிரியதர்ஷினி, பா.தேன்மலர் பாரதி ஆகியோர் செய்து வருகின்றனர்.