மதுரை
சிவகாசி நாடார்கள் உறவின்முறை 75-வது ஆண்டு பவள விழா
|சிவகாசி நாடார்கள் உறவின்முறை 75-வது ஆண்டு பவள விழா மதுரையில் நேற்று நடந்தது.
சிவகாசி நாடார்கள் உறவின்முறை 75-வது ஆண்டு பவள விழா மதுரையில் நேற்று நடந்தது.
பவள விழா
சிவகாசி நாடார்கள் உறவின்முறை சங்கத்தின் 75-வது ஆண்டு பவள விழா, மதுரை வேலம்மாள் மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஐடாஸ்கட்டர் அரங்கத்தில் நேற்று நடந்தது. விழா தலைவர் கூடலிங்கம் வரவேற்றார். உறவின்முறை தலைவர் சுரேஷ்கனகசபை தலைமை தாங்கினார்.
சிவகாசி நாடார்கள் உறவின்முறை சார்பாக, பூவந்தி கிராமத்தில் கட்டப்பட இருக்கும் செவிலியர் கல்லூரிக்கான அடிக்கல்லை, தொழில் அதிபரும், ஹட்சன் அக்ரோ நிறுவன தலைவருமான ஆர்.ஜி. சந்திரமோகன் திறந்து வைத்தார்.
இதுபோல், முதியோர் இல்ல கட்டிடத்திற்கான அடிக்கல்லை அரசன் குரூப் தலைவரும், சிவகாசி தொகுதி எம்.எல்.ஏ.வுமான அசோகன் திறந்து வைத்தார். தொழில் திறன் மேம்பாட்டு கட்டிட அடிக்கல்லை, ஏ.ஆர்.ஏ.எஸ்.குரூப் நிறுவனரும், உறவின் முறையின் முன்னாள் தலைவருமான கனகசபை திறந்து வைத்தார். பவள விழா மலரை பயோனியர் ஆசியா குரூப் நிறுவனர் அண்ணாமலை வெளியிட்டார். பவளவிழா கல்வெட்டை, வேளாண் உணவு தொழில் வர்த்தக சங்க தலைவர் ரத்தினவேல் திறந்து வைத்தார்.
மூத்த நிர்வாகிகளுக்கு நினைவு பரிசு
இந்த நிகழ்ச்சியில் உறவின்முறை பொது செயலாளர்கள் கோடீஸ்வரன், ஜெயபிரகாஷ், தலைவர் சுரேஷ் கனகசபை, துணை தலைவர் பிரபாகரன், பொருளாளர் ஸ்ரீதர், துணை தலைவர்கள், முன்னாள் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். வேளாண் தொழில் வர்த்தக சங்க தலைவர் ரத்தினவேல், உறவின் முறையின் 75 ஆண்டுகால வரலாற்று பயணம் குறித்து பேசினார். இதனை தொடர்ந்து முன்னாள் நிர்வாகிகள், மூத்த நிர்வாகிகள் கவுரவிக்கப்பட்டு, அவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. இதுபோல் மருத்துவமனை, பள்ளி மற்றும் கல்லூரிகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வரும் டாக்டர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், ஊழியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறவினர்முறை நிர்வாகிகள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். கல்லூரி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
இதுகுறித்து உறவின்முறை நிர்வாகிகள் கூறுகையில், "கடந்த 1947-ம் ஆண்டு மதுரையில் சிவகாசி நாடார்கள் உறவின் முறை தொடங்கப்பட்டது. அதன்பின்னர் படிப்படியாக வளர்ச்சி பெற்று, 1970-ல் பொது மருத்துவமனை மற்றும் மகப்பேறு மருத்துவமனையும், 1984-ல் சிவகாசி நாடார்கள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியும், 1999-ல் சிவகாசி நாடார்கள் பயோனியர் மீனாட்சி மகளிர் கல்லூரியும், 2002-ல் உறவின்முறை முதியோர் இல்லமும் அமைக்கப்பட்டது. தற்போது அடுத்த கட்டமாக முதியோர் இல்லம் அமைக்கப்படுகிறது. அதுபோல், நர்சிங் கல்லூரியும், தொழில் திறன் மேம்பாட்டு கட்டிடமும் அமைக்கப்படுகிறது" என்றனர்.