கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான 7.5 சதவீத கலந்தாய்வு தொடங்கியது
|கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான 7.5 சதவீத கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.
சென்னை,
தமிழ்நாட்டில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரிகளில் உள்ள கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு சார்ந்த 4 இளநிலை பட்டப்படிப்புகளுக்கும், உணவு, பால்வளம், கோழியினம் ஆகிய தொழில்நுட்ப படிப்புகளுக்கும் பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. இந்த கலந்தாய்வை தமிழ்நாடு கால்நடை அறிவியல் மற்றும் மருத்துவ பல்கலைக்கழகம் நடத்துகிறது.
கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு பட்டப்படிப்பில் 660 இடங்களுக்கும், சென்னை செங்குன்றத்தில் உள்ள தொழில்நுட்ப படிப்புக்கான கல்லூரியில் உணவு மற்றும் பால்வள தொழில்நுட்ப படிப்புகளில் 60 இடங்களுக்கும், கிருஷ்ணகிரியில் உள்ள கோழியின தொழில்நுட்ப கல்லூரியில் 40 இடங்களுக்கும் இந்த கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.
இந்த இடங்களுக்கு தமிழ்நாடு முழுவதிலும் இருந்து சுமார் 22 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு இருந்தன. அவர்களுக்கான தரவரிசைப் பட்டியலை கடந்த ஜூலை 26-ந்தேதி தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் வெளியிட்டது.
நேற்றைய தினம் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது. சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில் முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், விளையாட்டுப் பிரிவு மாணவர்கள் ஆகியோருக்கான சிறப்பு கலந்தாய்வு நேற்று நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து இளநிலை கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான 7.5 சதவீத கலந்தாய்வு சென்னை வேப்பேரியில் தொடங்கியது. அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீடு இடங்களுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.