தேனி
புகார் கொடுக்க 75 கி.மீ பயணம்... விசாரணைக்கு போலீஸ் வரவும் சிரமம்!மலைக்கிராமங்களின் எல்லைகள் மறுசீரமைப்பு செய்யப்படுமா?பொதுமக்கள் எதிர்பார்ப்பு
|புகார் கொடுக்க 75 கி.மீ. பயணம் செய்யும் நிலையில் விசாரணைக்கு போலீசார் வருவதற்கும் சிரமம் ஏற்படுவதால் மலைக்கிராமங்களின் எல்லைகள் மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
போலீஸ் துறை பல வழிகளில் நவீனமயமாக்கப்பட்டு வருகிறது. சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டாலோ, பொதுமக்கள் புகார் தெரிவித்தாலோ அடுத்த சில நிமிடங்களில் சம்பவ இடத்திற்கு போலீசார் வரும் வகையில், மோட்டார் சைக்கிள் ரோந்து படைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்பதற்காக மக்களின் தேவை அறிந்து போலீஸ் துறையில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.
எல்லை பிரச்சினை
இப்படி ஒருபுறம் இருந்தாலும், புகார் கொடுப்பதற்கே பல கிலோமீட்டர் தூரம் செல்ல வேண்டிய நிலையில் மக்கள் இருப்பதும், பக்கத்தில் போலீஸ் நிலையம் இருந்த போதிலும் எல்லை பிரச்சினை காரணமாக நீண்ட தூரம் சென்று புகார் கொடுக்க வேண்டிய நிலை இருப்பதும் போலீஸ்-பொதுமக்கள் இடையிலான நட்புறவில் பெருத்த விரிசலை ஏற்படுத்துகிறது.
அந்த வகையில், எல்லை பிரச்சினையால் பாதிக்கப்படும் கிராமங்கள் தேனி மாவட்டம், கடமலை-மயிலை ஒன்றிய பகுதிகளில் பல உள்ளன. எல்லை பிரச்சினையால் புகார் கொடுக்க மக்களும், விசாரணைக்கு சென்று வர போலீசாரும் படும் சிரமங்கள் குறித்து சற்று விரிவாக பார்ப்போம்.
75 கி.மீ. பயணம்
வருசநாடு வனப்பகுதியில் இந்திராநகர், பொம்மராஜபுரம் மலைக்கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்கள் ஹைவேவிஸ் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்டது. இந்த கிராமங்களில் இருந்து வனப்பகுதி வழியாக ஹைவேவிஸ் செல்வதற்கு ஒத்தையடி பாதை இருந்தது. இந்த வழியாக ஹைவேவிஸ் 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. வன விலங்குகள் நடமாட்டம் அதிகம் இருப்பதால் இந்த பாதையை யாரும் பயன்படுத்துவது இல்லை. இதனால், அது பல ஆண்டுகளாக புதர்மண்டி கிடக்கிறது.
இந்த கிராமங்களை சேர்ந்த மக்கள் தங்களுக்கு ஏதாவது பிரச்சினைகள் என்றாலோ, போலீசாரின் உதவி தேவைப்பட்டாலோ அங்கிருந்து கடமலைக்குண்டு, தேனி, சின்னமனூர் வழியாக ஹைவேவிஸ் செல்ல வேண்டும். இதற்கு சுமார் 75 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்ய வேண்டும். தூரம் அதிகம் என்பதோடு போதிய பஸ் வசதியும் கிடையாது. குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பஸ் வசதி உள்ளதால், புகார் கொடுப்பதற்கே ஒரு நாள் ஆகிவிடும். போலீசார் விசாரணைக்கு வருவதற்கும் அதே நிலை தான் உள்ளது.
ஆனால், இந்த கிராமங்களை சேர்ந்த மக்களுக்கு கடமலைக்குண்டு போலீஸ் நிலையம் சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. எனவே, இந்த கிராமங்களை கடமலைக்குண்டு போலீஸ் நிலைய எல்லைக்குள் கொண்டு வர வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது.
வைகைநகர்-தர்மராஜபுரம்
அதுபோல், வருசநாடு அருகே வைகை நகர் கிராமம் உள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்த கிராமம் கடமலைக்குண்டு போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்டது. இந்த கிராமத்தில் இருந்து கடமலைக்குண்டு போலீஸ் நிலையம் 12 கி.மீ. தொலைவில் உள்ளது. ஆனால், இந்த கிராமத்துக்கும் வருசநாடு போலீஸ் நிலையத்துக்கும் இடையே 1 கி.மீ. தூரம் கூட கிடையாது.
தர்மராஜபுரம் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்த கிராமமும் கடமலைக்குண்டு போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்டது. அந்த போலீஸ் நிலையத்தில் இருந்து 12 கி.மீ. தொலைவில் இந்த கிராமம் உள்ளது. ஆனால், இந்த கிராமத்தில் இருந்து 2 கி.மீ. தொலைவில் வருசநாடு போலீஸ் நிலையம் உள்ளது.
தங்கம்மாள்புரம் கிராமத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இதுவும் கடமலைக்குண்டு போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்டது. இவற்றுக்கு இடையே 8 கிலோமீட்டர் தூரம் உள்ளது. ஆனால், 5 கிலோமீட்டர் தொலைவில் வருசநாடு போலீஸ் நிலையம் உள்ளது.
எல்லை மறுசீரமைப்பு
இதேபோல், தாழையூத்து, முத்தாலம்பாறை, தொப்பையாபுரம், குமணன்தெழு கிராமங்களிலும் இதுபோன்ற போலீஸ் நிலைய எல்லை பிரச்சினை உள்ளது. இந்த கிராமங்களில் இருந்து மக்கள் புகார் கொடுக்கவும், போலீசார் விசாரணைக்கு வருவதற்கும் நீண்ட தூரம் செல்ல வேண்டியது உள்ளது. பக்கத்தில் போலீஸ் நிலையம் இருந்த போதிலும், தூரத்தில் உள்ள போலீஸ் நிலையங்களை தேடிச் செல்லும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதனால், வழக்குகளின் விசாரணையிலும் தேக்கமான நிலை உள்ளது.
எனவே, இந்த போலீஸ் நிலையங்களின் எல்லைகளை பொதுமக்கள் மற்றும் போலீசாரின் நலன் கருதி மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை பலதரப்பு மக்களும் முன்வைக்கின்றனர். இதுதொடர்பாக மக்கள் தெரிவித்த கருத்துகள் விவரம் வருமாறு:-
சிரமம் குறையும்
வைகைநகரை சேர்ந்த மலைச்சாமி கூறும்போது, 'எங்கள் ஊரில் இருந்து நடந்து செல்லும் தூரத்தில் தான் வருசநாடு போலீஸ் நிலையம் உள்ளது. ஆனால், புகார் கொடுக்க வேண்டும் என்றால் கடமலைக்குண்டு செல்ல வேண்டும். பஸ் வசதி குறைவாக உள்ள இந்த பகுதியில் மக்கள் இரவு நேரங்களில் ஏதாவது பிரச்சினை என்றால் போலீஸ் நிலையங்களுக்கு சென்று வர சிரமம் அடைகின்றனர். இந்த கிராமத்தை வருசநாடு போலீஸ் நிலையத்துடன் இணைக்க வேண்டும். அவ்வாறு இணைத்தால் மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். போலீசாரின் சிரமமும் குறையும்' என்றார்.
தர்மராஜபுரத்தை சேர்ந்த தங்கம் கூறும்போது, '2 கி.மீ. தூரத்தில் உள்ள வருசநாடு போலீஸ் நிலையத்தில் எங்கள் கிராமத்தை சேர்த்தால் மக்களின் அலைக்கழிப்பு குறையும். திருவிழாக்களுக்கு அனுமதி பெற வேண்டும் என்றால் கூட 11 கி.மீ. தூரம் கடமலைக்குண்டுவுக்கு செல்ல வேண்டியது உள்ளது. ஏதாவது பிரச்சினை என்றால் போலீசார் ஊருக்குள் வருவதற்கும் தாமதம் ஆகும். குறிப்பாக இரவு நேரங்களில் போலீசார் ரோந்து செல்வதற்கும் சிரமமான சூழல் உள்ளது. மக்களுக்காக எத்தனையோ திட்டங்களை அரசு செயல்படுத்தும் நிலையில், இந்த எல்லை மறுசீரமைப்பையும் செய்ய வேண்டும்' என்றார்.
வலிகளை போக்க வேண்டும்
மயிலாடும்பாறையை சேர்ந்த சடையாண்டி கூறும்போது, 'கிராமப்புற பகுதிகளுக்கு தினமும் போலீசார் ரோந்து வந்தால் அங்கு சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படும். திருடர்கள் நடமாட்டமும் இருக்காது. ஆனால் கடமலை-மயிலை ஒன்றிய பகுதியில் பல கிராமங்கள் எல்லை பிரச்சினையால் போலீஸ் நிலையங்களில் இருந்து வெகு தூரத்தில் இருக்கிறது. இதனால் போலீசார் ரோந்து வந்து செல்வதற்கு சிரமம் ஏற்படுகிறது.
போலீசார் மற்றும் பொதுமக்கள் அனுபவிக்கும் சிரமங்களை போக்குவதற்கு உயர் அதிகாரிகள் இந்த பகுதியில் எல்லைகளை மறு சீரமைப்பு செய்வதற்கு முன்வர வேண்டும். சில நேரங்களில் ஏதாவது தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் கையால் தாக்கினால் அதில் ஏற்படும் வலியை விட, சாலை வசதி இல்லாத மலை கிராம மக்கள் போலீஸ் நிலையங்களுக்கு செல்வதற்கு நீண்ட தூரம் சென்று வருவதால் உடலில் ஏற்படும் அசதியும், வலியும் அதிகமாக இருந்து விடுகிறது என்றே சொல்லலாம். அந்த வலிகளை போக்க போலீஸ் துறை முன்வர வேண்டும்' என்றார்.