< Back
மாநில செய்திகள்
சென்னை புறநகர் பகுதிகளில் கொட்டி தீர்த்த மழையால் ஏரிகளுக்கு 75 கனஅடி நீர் வருகை - நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல்
சென்னை
மாநில செய்திகள்

சென்னை புறநகர் பகுதிகளில் கொட்டி தீர்த்த மழையால் ஏரிகளுக்கு 75 கனஅடி நீர் வருகை - நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல்

தினத்தந்தி
|
7 Oct 2022 3:11 PM IST

சென்னை புறநகர் பகுதிகளில் கொட்டி தீர்த்த மழையால் ஏரிகளுக்கு 75 கன அடி நீர் வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை புறநகர் பகுதியில் ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு கொட்டி தீர்த்த மழையால் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது. குறிப்பாக பூண்டி ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் 6 மில்லி மீட்டர் அளவில் மழை பெய்துள்ளது.

இதேபோல், சோழவரத்தில் 6, புழலில் 8, கண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகையில் 12, செம்பரம்பாக்கத்தில் 3, தாமரைப்பாக்கத்தில் 10, கொரட்டூர் அணைக்கட்டு பகுதியில் 3 மற்றும் நுங்கம்பாக்கத்தில் 6.9, மீனம்பாக்கத்தில் 7.6 மில்லிமீட்டர் என்ற அளவில் மழை பதிவாகி உள்ளது. இதனால் 75 கன அடி நீர் ஏரிகளுக்கு வந்து உள்ளது.

குறிப்பாக சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் 3 ஆயிரத்து 291 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியில் 605 மில்லியன் கன அடியும், 1,081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் 138 மில்லியன் கன அடியும், 3 ஆயிரத்து 300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் 2 ஆயிரத்து 655 மில்லியன் கன அடியும், 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை-தேர்வாய்கண்டிகை ஏரியின் முழு கொள்ளளவான 500 மில்லியன் கன அடியை எட்டி நிரம்பி உள்ளது.

அதேபோல் 3 ஆயிரத்து 645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 2 ஆயிரத்து 845 மில்லியன் கன அடியும் நீர் இருப்பு உள்ளது. இதுதவிர 1,465 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட வீராணம் ஏரியில் 1,246 மில்லியன் கன அடி நீர் நிரம்பி உள்ளது. இதன் மூலம் 7 ஆயிரத்து 989 மில்லியன் கன அடி (7.9 டி.எம்.சி.) இருப்பு உள்ளது.

மேற்கண்ட தகவல்களை நீர்வள ஆதாரத்துறை மற்றும் சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்