விருதுநகர்
ரூ.75 கோடியில் சாலை அமைக்கும் பணி
|சிவகாசி மாநகராட்சி பகுதியில் ரூ.75 கோடியில் சாலை அமைக்கும் பணியை மேயர் சங்கீதா இன்பம் நள்ளிரவில் திடீர் ஆய்வு செய்தார்.
சிவகாசி,
சிவகாசி மாநகராட்சி பகுதியில் ரூ.75 கோடியில் சாலை அமைக்கும் பணியை மேயர் சங்கீதா இன்பம் நள்ளிரவில் திடீர் ஆய்வு செய்தார்.
சாலை அமைக்கும் பணி
சிவகாசி நகராட்சி நூற்றாண்டு நிதியில் ரூ.50 கோடியில் 28.53 கி.மீ. தூரமுள்ள 48 சாலைகள் அமைக்கவும், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் 6.59 கி.மீ. சாலை அமைக்க ரூ.8 கோடியும், நகர்புற சாலை மேம்பாட்டு திட்டத்தில் ரத வீதிகள் உள்பட 10.45 கி. மீ. சாலை அமைக்க ரூ.16 கோடியும், நகர சாலை மேம்பாட்டு திட்டத்தில் 8 கி.மீ. தூரம் சாலைகளை சீரமைக்க ரூ.3.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு டெண்டர் விடப்பட்டு மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதில் சிவகாசி பஸ் நிலையம் அருகில் உள்ள காந்தி ரோடு, மணிநகர் பஸ் நிறுத்தம், ஏ.வி.டி. பள்ளிக்கூட சாலை, ராணி அண்ணா காலனி வரை மின்விளக்குகள் அமைத்து, தார்சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு கடந்த ஒரு வாரமாக தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மேயர் ஆய்வு
இந்தநிலையில் சிவகாசி ரதவீதிகள், போலீஸ் ஸ்டேசன் ரோடு உள்பட சில பகுதிகளில் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகள் முழுமையாக நிறைவடையாததால் சாலை பணிகள் நிறைவடையாமல் உள்ளது.
இந்த பகுதியில் விரைவில் சாலை அமைக்கும் பணி தொடங்க உள்ளது. இந்த நிலையில் மணிநகர் பஸ் நிறுத்தம் பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை மேயர் சங்கீதாஇன்பம் நள்ளிரவு நேரத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். சாலைகள் அமைக்கும் பணி தரமாக செய்ய வேண்டும் என அதிகாரிகளை கேட்டுக்கொண்டார். ஆய்வின் போது மாநகராட்சி கமிஷனர் சங்கரன், பொறியாளர்கள் சாகுல்ஹமீது, ரமேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.