சென்னை
மாதவரம் அருகே 600 டன் வெடி மருந்துடன் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 75 கன்டெய்னர் லாரிகள் - பொதுமக்கள் புகாரின்பேரில் அகற்றப்பட்டது
|மாதவரம் அருகே 600 டன் வெடி மருந்துடன் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 75 கன்டெய்னர் லாரிகள், பொதுமக்கள் புகாரின்பேரில் அங்கிருந்து அகற்றப்பட்டது.
சென்னையை அடுத்த மாதவரம் பால்பண்ணை மஞ்சம்பாக்கம் பகுதியில் கன்டெய்னர் யார்டு உள்ளது. சென்னை துறைமுகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு செல்ல வேண்டிய கன்டெய்னர் லாரிகளும், வெளிமாநிலங்களில் இருந்து துறைமுகம் வரும் கன்டெய்னர் லாரிகளும் இங்கு நிறுத்தி வைப்பது வழக்கம்.
இந்த நிலையில் நாக்பூரில் உள்ள ஒரு தொழிற்சாலையில் இருந்து வெடி மருந்து தயாரிக்கும் மூலப்பொருட்களை கப்பல் மூலம் வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதற்காக 600 டன் வரையிலான மூலப்பொருட்களுடன் வந்த 75 கன்டெய்னர் லாரிகள், மஞ்சம்பாக்கம் பகுதியில் உள்ள கன்டெய்னர் யார்டில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
இந்த கன்டெய்னர் லாரிகளில் ஆபத்தான பொருட்கள் இருப்பதாக அந்த பகுதி பொதுமக்களிடையே தகவல் பரவியது. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், உடனடியாக அந்த கன்டெய்னர் லாரிகளை அங்கிருந்து அப்புறப்படுத்தும்படி மாதவரம் பால்பண்ணை போலீசில் புகார் செய்தனர்.
இதையடுத்து உதவி கமிஷனர் தட்சிணாமூர்த்தி சங்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கன்டெய்னர் லாரிகளில் வெடி மருந்து தயாரிக்கும் மூலப்பொருட்கள் பாதுகாப்பான முறையில் வைக்கப்பட்டு உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்தனர்.
அப்போது அங்கிருந்த கன்டெய்னர் லாரி டிரைவர்கள், "கடந்த 4 ஆண்டுகளாக வெடி மருந்து தயாரிக்கும் மூலப்பொருட்களை கன்டெய்னர் லாரிகளில் கொண்டு வந்து பாதுகாப்பாக கப்பலில் ஏற்றி வைத்து வருகிறோம். இந்த மூலப்பொருட்களால் எந்த பயமும் கிடையாது" என்றனர்.
எனினும் அந்த கன்டெய்னர் லாரிகளை வேறு இடத்துக்கு மாற்றும்படி லாரி டிரைவர்களிடம் போலீசார் அறிவுறுத்தினர். இதையடுத்து 600 டன் வெடிமருந்து தயாரிக்கும் மூலப்பொருட்களுடன் நிறுத்தி இருந்த 75 கன்டெய்னர் லாரிகளையும் அங்கிருந்து அப்புறப்படுத்தி, துறைமுகம் அருகே உள்ள திருவொற்றியூர் லாரி நிறுத்தத்துக்கு கொண்டு சென்று நிறுத்தப்பட்டது.