< Back
மாநில செய்திகள்
74-வது குடியரசு தினம்: எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து
மாநில செய்திகள்

74-வது குடியரசு தினம்: எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து

தினத்தந்தி
|
26 Jan 2023 9:27 AM IST

குடியரசு தினத்தை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சென்னை,

நாடு முழுவதும் 74-வது குடியரசு தின விழா இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் குடியரசு தினத்தை முன்னிட்டு அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "அனைவருக்கும் சமஉரிமை, சாமானியருக்கும் சமநீதி, வேறுபாடற்ற சமூகம் போன்ற உயரிய கோட்பாடுகளை கொண்ட இந்திய அரசியலமைப்பு சாசனம் இயற்றப்பட்ட நன்னாளான குடியரசு தினத்தில், மக்களாட்சி மலர பாடுபட்ட மாமனிதர்களின் ஈடு இணையற்ற தியாகங்களை போற்றி வணங்குகிறேன்" என்று கூறியுள்ளார்.

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "அந்நியர்களின் அடக்கு முறையை தகர்த்தெறிந்து இந்தியா சுதந்திரக் காற்றை சுவாசித்த பின், இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டு மக்களாட்சி மலர்ந்த திருநாளான ஜனவரி 26 ஆம் நாள் குடியரசு தினமாக ஒவ்வொரு ஆண்டும் அனுசரிக்கப்படுகிறது.

இத்திருநாளில் தாய்த் திருநாட்டில் சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் சமூக நீதி தழைத்தோங்க, நாம் அனைவரும் சாதி, மதம், மொழி உள்ளிட்ட வேறுபாடுகளைக் கடந்து ஒற்றுமையுடன் வாழ்வோம் என உறுதியேற்போம்!" என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்