திருவாரூர்
7,215 பேர் எழுத, படிக்க தெரியாதவர்கள்
|திருவாரூர் மாவட்டத்தில் 7,215 பேர் எழுத, படிக்க தெரியாதவர்கள் என முதன்மை கல்வி அதிகாரி புகழேந்தி கூறினார்.
திருவாரூர் மாவட்டத்தில் 7,215 பேர் எழுத, படிக்க தெரியாதவர்கள் என முதன்மை கல்வி அதிகாரி புகழேந்தி கூறினார்.
ஆசிரியர் பயிற்றுனர்கள்
திருவாரூர் மாவட்ட அனைத்து வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்களுக்கான மீளாய்வு கூட்டம் கொரடாச்சேரி ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி புகழேந்தி தலைமை தாங்கினார். கூட்டத்துக்கு தொடக்கக்கல்வி அலுவலர் சவுந்தர்ராஜன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் பள்ளி செல்லாமல் இடை நின்ற மாணவர்கள், புதிய பாரத எழுத்தறிவு திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் முதன்மை கல்வி அதிகாரி பேசியதாவது:-
எழுத்துக்கள் தெரியாத மாணவர்கள்
வட்டாரக்கல்வி அலுவலர்கள் மற்றும் ஆசிரிய பயிற்றுனர்கள் பள்ளி பார்வைக்கு செல்லும்போது முற்றிலும் எழுத்துக்கள் தெரியாத மாணவர்களை இனம் கண்டறிந்து அவர்களுக்கு தேவையான பயிற்சிகளை வழங்க ஆசிரியர்களுக்கு தக்க ஆலோசனைகள் வழங்க வேண்டும்.
தொடர்ந்து பள்ளிக்கு வருகை புரியாத மாணவர்களின் இல்லத்திற்கு சென்று அவர்களை மீண்டும் பள்ளிக்கு வருகை புரிய உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
எழுத, படிக்க தெரியாதவர்கள்
திருவாரூர் மாவட்டத்தில் 7,215 பேர் எழுத, படிக்க தெரியாத நிலையில் உள்ளனர். இவர்களை குடியிருப்பு வாரியாக ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களை கொண்டு கணக்கெடுப்பு செய்து அவர்களுக்கு புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ் கற்றல் நிலையை அடைய செய்ய வேண்டும்.
புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் மையங்கள் செப்டம்பர் 1-ந் தேதி முதல் தொடங்க உள்ளது. அதற்கேற்ற வகையில் முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.