புதுக்கோட்டை
7,069 விவசாயிகள் ஆதார் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றவில்லை
|பிரதமரின் நிதி உதவி திட்டத்தில் நிதி பெறுவதற்கு 7,069 விவசாயிகள் தங்களது ஆதார் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றவில்லை. 14-வது தவணை நிதி பெற உடனடியாக பதிவேற்ற அறிவறுத்தப்பட்டுள்ளது.
பிரதமரின் நிதி உதவி திட்டம்
தமிழ்நாட்டில் பிரதமரின் விவசாயிகளுக்கான கவுரவ நிதி திட்டமானது கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் 1-ந் தேதி முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் விவசாயிகள் சாகுபடி செய்ய தேவையான வேளாண் இடுபொருட்களை கொள்முதல் செய்வதற்கு நிதி உதவி அளித்திடும் வகையில் மத்திய அரசு ஒரு விவசாய குடும்பத்திற்கு ரூ.2 ஆயிரம் வீதம் மூன்று தவணைகளாக ஆண்டுக்கு மொத்தம் ரூ.6 ஆயிரம் விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக வழங்கி வருகிறது.
இதுவரை பதிவு செய்த விவசாயிகளுக்கு 13 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் 14-வது தவணை தொகை விரைவில் விடுவிக்கப்பட உள்ளது. இத்திட்டத்தில் ஆதார் எண் அடிப்படையிலான நிதி விடுவிப்பு நடைபெறுவதால் இதுவரை வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காத விவசாயிகள் தங்களது வங்கிக் கணக்கு உள்ள வங்கிக் கிளையை அனுகி உடனடியாக இணைத்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது.
ஆதார் விவரங்கள்
மேலும் விவசாயிகள் தங்களது ஆதார் விவரங்களை eKYC பி.எம்.கிசான் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். பதிவேற்றம் செய்ய தவறிய விவசாயிகளுக்கு 14-வது தவணை மற்றும் அதனை தொடர்ந்து வரும் தவணை வழங்கப்பட மாட்டாது. எனவே விவசாயிகள் தங்களது ஆதார் விவரங்களை பதிவேற்றம் செய்ய அருகில் உள்ள பொதுசேவை மையங்கள் அல்லது தபால் நிலையங்களை அணுகி உடனடியாக பதிவேற்றம் செய்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 7,069 பயனாளிகள் தங்களது ஆதார் விவரங்களை பதிவேற்றம் செய்யாமல் உள்ளனர். எனவே பதிவேற்றம் செய்யாதவர்கள் பதிவேற்றம் செய்து தொடர்ந்து பயனடையலாம் என கலெக்டர் மெர்சி ரம்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.