கள்ளக்குறிச்சி
பொதுமக்கள், விவசாயிகளுக்கு 7 ஆயிரம் மரக்கன்றுகள் இலவசம்
|கள்ளக்குறிச்சி வனச்சரகத்தில் பொதுமக்கள், விவசாயிகளுக்கு 7 ஆயிரம் மரக்கன்றுகள் இலவசமாக வழங்குவதற்கு தயார் நிலையில் உள்ளதாக வனச்சரகர் தெரிவித்தார்.
தமிழகம் முழுவதும் முதல்-அமைச்சரின் கனவு திட்டமான பசுமை தமிழக திட்டம் மூலம் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது. அதன்படி கோட்ட வன அலுவலர் ஷஷாங் கஷ்யப் ரவி உத்தரவின்பேரில் கள்ளக்குறிச்சி சமூக காடுகள் வன சரகம் சார்பில் காரனூரில் 7 ஆயிரம் மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டுள்ளது. இதில் விவசாய நில பகுதிகளில் நடுவதற்கு ஏற்ற வகையில் தேக்கு, மகாகனி, மலைவேம்பு போன்ற மரக்கன்றுகளும், பொது இடங்களில் நடுவதற்கு ஏற்ற வகையில் வேம்பு, புங்கை, நாவல், இலுப்பை, புளியங்கன்று போன்ற மரக்கன்றுகள் தயார் நிலையில் உள்ளது. மரக்கன்றுகள் தேவைப்படும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்களின் ஆதார் அட்டை நகல், நிலத்தின் சிட்டா நகல், 2 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள் ஆகிய ஆவணங்களை கொடுத்து இலவசமாக மரக்கன்றுகள் பெற்றுக் கொள்ளலாம். எனவே விருப்பமுள்ளவர்கள் வனவர் பவுல்-9488470724, வனச்சரகர் சந்திரசேகரன்-8524025267 ஆகியோரை தொடர்பு கொண்டு மேற்கூறிய ஆவணங்கள் கொடுத்து தேவையான மரக்கன்றுகளை பெற்றுக்கொள்ளலாம். மேற் கண்டவாறு கள்ளக்குறிச்சி வனச்சரகர் சந்திரசேகரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.