< Back
மாநில செய்திகள்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

ஜல்லிக்கட்டில் 700 காளைகள் சீறிப்பாய்ந்தன; 15 பேர் காயம்

தினத்தந்தி
|
25 May 2022 12:41 AM IST

அன்னவாசல் அருகே கே.நாங்குப்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 700 காளைகள் சீறிப்பாய்ந்தன. இதில் காளைகள் முட்டியதில் 15 பேர் காயம் அடைந்தனர்.

ஜல்லிக்கட்டு

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள கே.நாங்குப்பட்டி முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதையொட்டி காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. பின்னர் ஜல்லிக்கட்டை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. மற்றும் ஆர்.டி.ஓ. குழந்தைசாமி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். பின்னர் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

முன்னதாக வாடிவாசலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இந்த காளைகளை யாரும் பிடிக்கவில்லை. இதையடுத்து அலங்கரிக்கப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன.

சீறிப்பாய்ந்த காளைகள்

வாடிவாசலில் இருந்து ஆக்ரோஷமாக சீறிப்பாய்ந்த காளைகளில் பல காளைகள் மின்னல் வேகத்தில் சென்றன. சில காளைகள் களத்தில் நின்று தன்னை அடக்க வந்த வீரர்களை அருகில் நெருங்க விடாமல் மிரட்டின. இருப்பினும் பல காளைகளை 120 மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். சில காளைகள் வீரர்களை தூக்கி வீசி பந்தாடியது. அப்போது பொதுமக்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.

இதில் புதுக்கோட்டை, விராலிமலை, கீரனூர், இலுப்பூர், அன்னவாசல், திருச்சி, கரூர், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்த 700 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

15 பேர் காயம்

ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் அஜீத்குமார் (வயது 20), குமார் (39) உள்ளிட்ட வீரர்கள், பார்வையாளர்கள், மாட்டின் உரிமையாளர்கள் உள்பட 15 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவகுழுவினர் சிகிச்சை அளித்தனர். இதில் 2 பேர் மேல்சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் சைக்கிள், கட்டில், மின்விசிறி, குக்கர், ஹாட்பாக்ஸ், சில்வர் குடம், அண்டா, மிக்சி, டைனிங்டேபிள் உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. இந்த பரிசுகளை வீரர்கள், மாட்டின் உரிமையாளர்கள் அள்ளி சென்றனர்.

பாதுகாப்பு

ஜல்லிக்கட்டில் விராலிமலை, கீரனூர், இலுப்பூர், அன்னவாசல் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு வாகனங்கள், மரங்கள், உயர்ந்த கட்டிடங்கள், மேடைகளில் நின்று கண்டு களித்தனர். இலுப்பூர் போலீஸ் துணை சூப்பிரண்டு அருள்மொழிஅரசு தலைமையில் அன்னவாசல் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் உள்ளிட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

பாகுபலி காளை வெற்றி

ஜல்லிக்கட்டில் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பாகுபலி காளை குறித்து ஒலிபெருக்கியில் அறிவித்தவுடன் பார்வையாளர்கள், வீரர்கள் மத்தியில் உற்சாகம் ஏற்பட்டது. பின்னர் அனைவரின் பார்வையும் பாகுபலி காளை மீது விழுந்தது.

வாடிவாசலில் இருந்து பாகுபலி காளை வெளியே வந்தபோது வீரர்கள் அனைவரும் தடுப்பு கட்டைமீது ஏறிக்கொண்டனர். பின்னர் வீர நடையுடன் அந்த காளை திடலில் இருந்து வெளியேறியது. பாகுபலி காளையை வீரர்கள் யாரும் நெருங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ.வின் 2 காளைகளும் வெற்றி வாகை சூடியது. இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி மற்றும் விஜயபாஸ்கரின் காளைகளுக்கு பரிசாக சைக்கிள், வெள்ளி நாணயம், குத்து விளக்கு உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

உரிமையாளரை பதம் பார்த்த காளை

கே.நாங்குப்பட்டி ஜல்லிக்கட்டில் சேதுராப்பட்டி மாமுண்டி என்பவரது ஜல்லிக்கட்டு காளை அதன் உரிமையாளர் மீது எதிர்பாராதவிதமாக பாய்ந்தது. இதில், காயம் அடைந்த மாமுண்டிக்கு ஜல்லிக்கட்டு திடலில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கீரனூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஜல்லிக்கட்டு காளைக்கு காயம்

கே.நாங்குப்பட்டி ஜல்லிக்கட்டில் கலந்து கொண்ட காளை ஒன்று விட்டாநிலைப்பட்டி பூமிநாதன் என்பவரின் ஜல்லிக்கட்டு காளை மீது பாய்ந்தது. இதில் பூமிநாதன் காளையின் காலில் காயம் ஏற்பட்டு ரத்தம் வந்தது. பின்னர் புதுக்கோட்டை ஆம்புலன்ஸ் குழுவினர் அந்த காளைக்கு சிகிச்சை அளித்தனர்.

மயங்கிய இன்ஸ்பெக்டருக்கு சிகிச்சை

அன்னவாசல், ஆதனப்பட்டி, மருதாந்தலை, மதியநல்லூர் பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகளும், கோவில் திருவிழா, தேரோட்டம், கலைநிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில் கே.நாங்குப்பட்டி ஜல்லிக்கட்டில் பாதுகாப்பு பணியில் இருந்த அன்னவாசல் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் திடீரென மயங்கினார். பின்னர் ஜல்லிக்கட்டு திடலில் இருந்த மருத்துவக்குழுவினர் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மாத்திரைகளை வழங்கி ஓய்வெடுக்க அறிவுறுத்தினர்.

மேலும் செய்திகள்