< Back
மாநில செய்திகள்
ரெயில்வே பெண் ஊழியர் வீட்டில் 70 பவுன் நகைகள் கொள்ளை
திருச்சி
மாநில செய்திகள்

ரெயில்வே பெண் ஊழியர் வீட்டில் 70 பவுன் நகைகள் கொள்ளை

தினத்தந்தி
|
5 Sept 2022 12:43 AM IST

திருச்சியில் பட்டப்பகலில் ரெயில்வே பெண் ஊழியர் வீட்டில் 70 பவுன் நகைகள் கொள்ளை போனது. வீட்டின் சுவரில் ஏறிக் குதித்து வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்களின் உருவம் அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் சிக்கியது.

திருச்சியில் பட்டப்பகலில் ரெயில்வே பெண் ஊழியர் வீட்டில் 70 பவுன் நகைகள் கொள்ளை போனது. வீட்டின் சுவரில் ஏறிக் குதித்து வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்களின் உருவம் அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் சிக்கியது.

ரெயில்வே ஊழியர்

திருச்சி கருமண்டபம் ஆர்.எம்.எஸ்.காலனி அசோக்நகர் மேற்கு விஸ்தரிப்பு பகுதியை சேர்ந்தவர் தனபால். இவருடைய மனைவி நாகலட்சுமி (வயது 57). இவர் ரெயில்வேயில் ஊழியராக பணியாற்றி வருகிறார். தனபால் இறந்து விட்டார். நாகலட்சுமி தனது தாயுடன் வீட்டில் வசித்து வருகிறார்.

இவருடைய மகள் திருமணமாகி எடமலைப்பட்டிபுதூரில் வசித்து வருகிறார். அவ்வப்போது வீட்டுக்கு வந்து தாய் நாகலட்சுமியை பார்த்துவிட்டு செல்வது வழக்கம்.

70 பவுன் நகைகள் கொள்ளை

இந்தநிலையில் நேற்று காலை கடைவீதியில் பொருட்கள் வாங்குவதற்காக நாகலட்சுமி வீட்டை பூட்டிவிட்டு தெப்பக்குளம் பகுதிக்கு சென்றார். பின்னர் பகல் 1.45 மணி அளவில் மீண்டும் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் அதில் இருந்த 70 பவுன் நகைகள், ரூ.1 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இதை கண்ட அவர் கண்ணீர்விட்டு கதறி அழுதார். பின்னர் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். உறவினர்கள் விரைந்து வந்து கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸ் உதவி கமிஷனர் அஜய்தங்கம் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சிவக்குமார், சியாமளாதேவி மற்றும் போலீசார் அங்கு சென்று விசாரித்தனர்.

போலீஸ் மோப்பநாய் பொன்னி சம்பவ இடத்தை மோப்பம் பிடித்து விட்டு சிறிதுதூரம் ஓடி நின்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இக்கொள்ளை சம்பவத்தில் குறைந்த எடைகொண்ட நகைகள் பீரோ அருகே சிதறி கிடந்தன.

கேமராவில் பதிவு

பின்னர் அந்த பகுதியில் ஒரு வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் 2 வாலிபர்கள் அந்த வீட்டின் பக்கவாட்டு பகுதியில் உள்ள காலிஇடத்தில் சிறுநீர் கழிப்பது போல் சென்று சுவர் ஏறி குதித்து உள்ளே சென்ற காட்சி பதிவாகி இருந்தது. மேலும் 2 வாலிபர்கள் தெருக்களில் யாரும் வருகிறார்களா? என நோட்டமிட்டு நடந்து சென்றதும் பதிவாகி இருந்தது. இதையடுத்து இந்த கொள்ளை சம்பவத்தில் 4 பேர் ஈடுபட்டு இருக்கலாம் என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்