திருநெல்வேலி
ஆசிரியை வீட்டில் 70 பவுன் நகை கொள்ளை
|நெல்லையில் ஆசிரியை வீட்டின் கதவை உடைத்து 70 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஆசிரியை
நெல்லை பாளையங்கோட்டை தியாகராஜ நகர் 12-வது தெருவைச் சேர்ந்தவர் நமச்சிவாயம். இவருடைய மனைவி பொன்னம்மாள். இவர் முன்னீர்பள்ளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
இவர் நேற்று காலையில் வழக்கம்போல் பள்ளிக்கூடத்துக்கு வேலைக்கு புறப்பட்டு சென்றார். பின்னர் நமச்சிவாயம் வெளியில் சென்று விட்டு, மதியம் வீட்டுக்கு திரும்பி வந்தார்.
70 பவுன் நகை கொள்ளை
அப்போது அவரது வீ்ட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. மேலும், பீரோவில் இருந்த 70 பவுன் நகைகள் கொள்ளை போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து பெருமாள்புரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
உடனே நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் (பொறுப்பு) பிரவேஷ்குமார், மாநகர கிழக்கு பகுதி துணை கமிஷனர் ஆதர்ஷ் பசேரா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.
கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு
நமச்சிவாயத்தின் வீட்டில் ஆட்கள் இ்ல்லாததை நோட்டமிட்ட மர்நபர்கள் பட்டப்பகலில் அவரது வீட்டின் முன்பக்க கதவை உடைத்து திறந்து உள்ளே நுைழந்து, பீரோவையும் உடைத்து நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.
கொள்ளை நடந்த வீட்டில் பதிவான தடயங்களை கைரேகை நிபுணர்கள் சேகரித்தனர். போலீசாரின் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை நடந்த இடத்தில் மோப்பம் பிடித்து விட்டு சிறிது தூரம் ஓடியது. ஆனாலும் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை போலீசார் சேகரித்து ஆய்வு செய்தனர். மேலும் இதுதொடர்பாக பெருமாள்புரம் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
தனிப்படை அமைப்பு
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர் கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதனால் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் (பொறுப்பு) பிரவேஷ்குமார் உத்தரவின்பேரில், போலீசார் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
நெல்லையில் பட்டப்பகலில் ஆசிரியையின் வீட்டின் கதவை உடைத்து 70 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.