நீலகிரி
நீலகிரி மாவட்டத்திற்கு கோடை சீசனில் 7½ லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை- அதிகாரிகள் தகவல்
|கோடை சீசனையொட்டி நீலகிரி மாவட்டத்திற்கு இந்த ஆண்டு சுமார் 7½ லட்சம் சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஊட்டி
கோடை சீசனையொட்டி நீலகிரி மாவட்டத்திற்கு இந்த ஆண்டு சுமார் 7½ லட்சம் சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மலைகளின் ராணி
இந்தியாவில் உள்ள மலை வாசஸ்தலங்களில் நீலகிரி மாவட்டம் தனக்கென தனி இடத்தை பிடித்து மலைகளின் ராணி என்று அழைக்கப்பட்டு வருகிறது. இதனால் நீலகிரி மாவட்டத்தில் நிலவும் இதமான காலநிலை மற்றும் இயற்கை வளம் மிகுந்த வனப்பகுதிகள் மற்றும் சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க தமிழகத்தின் பிற மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவார்கள்.
பொதுவாக ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் முதலாவது சீசனும், செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் 2-வது சீசனும் களைகட்டும்.
நீலகிரி மாவட்டத்திற்கு வருகை புரியும் சுற்றுலா பயணிகளுக்கு தமிழ்நாட்டின் கலை மற்றும் கலாசாரத்தை வெளிப்படுத்தும் வகையிலும், அவர்களை மகிழ்விக்கும் வகையிலும் மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத்துறை, தோட்டக்கலைத்துறை மற்றும் பிற துறைகளை சார்பில் கோடை விழா நடத்தப்படுகிறது.
7½ சுற்றுலா பயணிகள் வருகை
இந்த நிலையில் இந்த ஆண்டு ஏப்ரல், மே மாத கோடை சீசனையொட்டி சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக கோடை விழா கடந்த மாதம் 7-ந் தொடங்கியது. இதன்படி 7-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை கோடைவிழா நடந்தது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு காரணமாக வீட்டுக்குள் முடங்கிக் கிடந்த சுற்றுலா பயணிகள் இந்த ஆண்டு குடும்பத்துடன் நீலகிரி மாவட்டத்திற்கு வந்து கோடை விழாக்காளை கண்டு களித்தனர். மேலும் ஊட்டியில் தாவரவியல் பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா, பைக்காரா உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு சென்று பார்வையிட்டனர்.
இதன்படி கோடை சீசனான ஏப்ரல், மே ஆகிய 2 மாதங்களில் ஊட்டி தாவரவியல் பூங்காவிற்கு சுமார் 7½ லட்சம் பேர் வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்கள் மலர் கண்காட்சியை கண்டு ரசித்து, புல்வெளியில் விளையாடி மகிழ்ந்தனர்.
படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்
இதேபோல் படகு இல்லத்திற்கு சுமார் 5½ லட்சம் பேரும், ரோஜா பூங்காவிற்கு சுமார் 3½ லட்சம் பேரும் வந்துள்ளனர். நேற்று படகு இல்லத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் படகுகளில் சவாரி செய்து மகிழ்ந்தனர். கொரோனா பரவல் காரணமாக வியாபாரம் மந்த நிலையில் இருந்த நிலையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்ததால் வியாபாரிகள் மற்றும் விடுதி உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.