மதுரை
7 மயில்களை வேட்டையாடிய கும்பல்
|டி.கல்லுப்பட்டி அருகே இறைச்சிக்காக வேட்டையாடப்பட்ட 7 மயில்கள், இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. தப்பி ஓடியவர்களை வனத்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
பேரையூர்,
டி.கல்லுப்பட்டி அருகே இறைச்சிக்காக வேட்டையாடப்பட்ட 7 மயில்கள், இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. தப்பி ஓடியவர்களை வனத்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
வனத்துறையினர் ரோந்து
சாப்டூர் வனத்துறை வனச்சரகர் செல்லமணி மற்றும் வனத்துறையினர் குற்றத்தடுப்பு சம்பந்தமாக திருமங்கலம் தாலுகா நாகையாபுரம் அருகில் உள்ள குழிப்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் வனத்துறையினரை பார்த்தவுடன் இருசக்கர வாகனத்தை அங்கேயே போட்டுவிட்டு தப்பி சென்று விட்டனர்.
வனத்துறையினர் சோதனை செய்ததில் அங்கு 7 ஆண் மயில்கள் வேட்டையாடப்பட்டு கறிக்காக உரிக்கப்பட்ட நிலையில் இருந்தது. மேலும் அங்கிருந்த இறந்த மயில்களையும், இருசக்கர வாகனத்தையும், வேட்டைக்கு பயன்படுத்தப்பட்ட நெற்றி விளக்குகள் மற்றும் கவட்டை வில்லுகள்(மரக்கட்டை வில்லுகள்) ஆகியவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
தேடுதல் வேட்டை
இறந்த மயில்களை கால்நடை துறையினர் பிரேத பரிசோதனை செய்து மயில்களின் கல்லீரல், இதயம், உள்பட தசைப் பகுதிகளை தடயவியல் ஆய்வுக்காக ராமநாதபுரம் அனுப்பி வைக்கப்பட உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து சாப்டூர் வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து மயில்களை வேட்டையாடி விட்டு தப்பி ஓடியவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.