< Back
மாநில செய்திகள்
7 மாநில இடைத்தேர்தல் முடிவுகள் பா.ஜ.க.வுக்கு எதிரான மக்களின் அதிருப்தியை வெளிப்படுத்துகின்றன - செல்வப்பெருந்தகை

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

7 மாநில இடைத்தேர்தல் முடிவுகள் பா.ஜ.க.வுக்கு எதிரான மக்களின் அதிருப்தியை வெளிப்படுத்துகின்றன - செல்வப்பெருந்தகை

தினத்தந்தி
|
17 July 2024 3:41 PM IST

பா.ஜ.க.விற்கு கடும் வீழ்ச்சி வர இருப்பதை இடைத்தேர்தல் முடிவுகள் உறுதி செய்கின்றன என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

கடந்த 10 ஆண்டு கால பா.ஜ.க. ஆட்சியின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு பாடம் புகட்டுகிற வகையில் மக்களவை தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத வகையில் மக்கள் தீர்ப்பளித்துள்ளனர். கடந்த 2019 தேர்தலை விட 63 இடங்கள் குறைவாக பா.ஜ.க.வுக்கு கிடைத்திருக்கிறது. இந்த தோல்விக்கு பிறகு 40 நாட்கள் கழித்து தமிழகம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் நடைபெற்ற 13 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் கடந்த ஜூலை 13-ம் தேதி வெளிவந்தது. இதில் 13 தொகுதிகளில் 10 தொகுதிகளில் காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெற்றிருக்கிறது. இதில் காங்கிரஸ் கட்சி 4 இடங்களிலும், தி.மு.க. 1 இடத்திலும் மற்றும் ஆம் ஆத்மி, ராஷ்டிரிய ஜனதா தளம், திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் வெற்றி பெற்றிருக்கின்றன. பா.ஜ.க., மொத்தம் 13 இடங்களில் போட்டியிட்டு 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது. இது பா.ஜ.க.வுக்கு கிடைத்த மிகப்பெரிய தோல்வியாகும்.

தமிழகத்தை பொறுத்தவரை சமீபத்தில் நடந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா 67,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மகத்தான சாதனை புரிந்திருக்கிறார். இது முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசின் சாதனைகளுக்கு கிடைத்த மிகச் சிறந்த நற்சான்றாகும். இந்த தேர்தல் தீர்ப்பின் மூலம் சந்தர்ப்பவாத, கொள்கையற்ற பா.ம.க., பா.ஜ.க. கூட்டணிக்கு உரிய பாடத்தை விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி மக்கள் புகட்டியிருக்கிறார்கள். அன்புமணி ராமதாஸ், அண்ணாமலையின் சந்தர்ப்பவாத, சுயநல அரசியலுக்கு விக்கிரவாண்டி வாக்காளர்கள் சம்மட்டி அடி கொடுத்திருக்கிறார்கள்.

கடந்த மக்களவை தேர்தலிலேயே பா.ஜ.க. ஏற்கனவே வெற்றி பெற்ற 303 இடங்களில் இருந்து 240 இடங்களாக குறைந்தும், ஒட்டுமொத்த தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களுக்கும் குறைவான எண்ணிக்கையிலேயே வெற்றி வெற்றிருக்கிறது. மக்களவையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருக்கிறது. அங்கீகரிக்கப்பட்ட இந்தியா கூட்டணியின் சார்பாக எதிர்கட்சி தலைவராக ராகுல்காந்தி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். கடந்த மக்களவை தேர்தல் நடைபெற்றபோது தலைவர் ராகுல்காந்தி ஆற்றிய உரையை எதிர்கொள்ள முடியாமல் பிரதமர் மோடியும், உள்துறை மந்திரி அமித்ஷாவும் திணறி திக்கு முக்காடியதை தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்கள் பார்க்கிற வாய்ப்பு கிடைத்தது. கடந்த காலங்களில் எதேச்சதிகாரமான முறையில் பிரதமர் மோடி மக்களவையில் செயல்பட்டதைப் போல இனியும் செயல்பட முடியாத அளவிற்கு பா.ஜ.க.வுக்கு மக்கள் கடிவாளம் போட்டிருக்கிறார்கள்.

கடந்த மக்களவை தேர்தலுக்கு பிறகு சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் இந்தியா கூட்டணி பெற்ற வாக்குகள் ஜனநாயகத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும். இடைத்தேர்தல் நடைபெற்ற 13 சட்டமன்ற தொகுதிகளில் கடந்த மக்களவை தேர்தலில் பா.ஜ.க. 50 சதவிகிதத்திற்கும் கூடுதலான வாக்குகளை பெற்றிருந்தது. இதற்கு பிறகு 40 நாட்களில் தற்போது நடைபெற்ற அதே 13 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்களில் பா.ஜ.க.வின் வாக்கு 35 சதவிகிதமாக குறைந்திருக்கிறது. அதேநேரத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட தி.மு.க. போன்ற இந்தியா கூட்டணி கட்சிகளின் வாக்கு சதவிகிதம் உயர்ந்திருப்பதை புள்ளி விவரங்கள் கூறுகின்றன. 7 மாநில இடைத்தேர்தலை பொறுத்தவரை பா.ஜ.க.வுக்கு எதிராக தேசிய அளவில் மக்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இனி வருகிற காலங்களில் பா.ஜ.க.விற்கு கடும் வீழ்ச்சி வர இருப்பதை இந்த இடைத் தேர்தல் முடிவுகள் உறுதி செய்கின்றன. இனி சில மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல்களிலும் பா.ஜ.க.வுக்கு உரிய பாடத்தை புகட்டுவதற்கு மக்கள் தயாராகி விட்டார்கள் என்பதையே 7 மாநில இடைத்தேர்தல் முடிவுகள் உணர்த்துகின்றன. எனவே, பா.ஜ.க.வின் வீழ்ச்சி ஆரம்பமாகிவிட்டது. இந்தியா கூட்டணியின் எழுச்சி தொடங்கி விட்டது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்