< Back
மாநில செய்திகள்
கடலூர் மாவட்டத்தில்சாராயம் விற்பனையை தடுக்க 7 தனிப்படைகள் அமைப்புபோலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் தகவல்
கடலூர்
மாநில செய்திகள்

கடலூர் மாவட்டத்தில்சாராயம் விற்பனையை தடுக்க 7 தனிப்படைகள் அமைப்புபோலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் தகவல்

தினத்தந்தி
|
16 May 2023 2:33 AM IST

கடலூர் மாவட்டத்தில் சாராயம் விற்பனையை தடுக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் கூறினார்.


17 பேர் பலி

விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்த 17 பேர் பலியானார்கள். மேலும் 40-க்கும் மேற்பட்டவர்கள் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் சிலர் கவலைக்கிடமாக உள்ளதாக தெரிகிறது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை உருவாக்கியது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் கள்ளச்சாராயத்தை ஒழிக்க சிறப்பு தேடுதல் வேட்டையில் ஈடுபட வேண்டும் என்றும், வனப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்றும் டி.ஜி.பி. சைலேந்திரபாபு போலீசாருக்கு உத்தரவிட்டார்.

தனிப்படைகள் அமைப்பு

கடலூர் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின்பேரில் நேற்று முன்தினமே போலீசார் அதிரடி சாராய வேட்டையில் ஈடுபட்டு, 88 பேரை கைது செய்தனர். இதில் மதுபாட்டில்கள் கடத்தி விற்பனை செய்தவர்களும் அடங்குவர். இந்நிலையில் நேற்று 2-வது நாளாக சாராய வேட்டையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர்.

இது பற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராமிடம் கேட்ட போது, கடலூர் மாவட்டத்தில் இன்று (நேற்று) 2-வது நாளாக சாராயத்தை ஒழிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இதில் 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 22 பேரை கைது செய்துள்ளோம். இது தவிர நமது மாவட்டத்தில் 7 உட்கோட்டங்கள் உள்ளன. ஒரு உட்கோட்டத்திற்கு தலா ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தனிப்படை போலீசார் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதியில் தீவிர சாராய தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடுவார்கள் என்றார்.

மேலும் செய்திகள்