நாகப்பட்டினம்
நாகை மாவட்டத்தில் 7 மீட்பு குழுவினர் தயார்
|நாகை மாவட்டத்தில் 7 மீட்பு குழுவினர் தயார்
பேரிடர் காலங்களில் உதவுவதற்காக நாகை மாவட்டத்தில் 7 மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர் என தீயணைப்புத்துறை டி.ஜி.பி. ரவி தெரிவித்தார்.
ஆய்வு
வடகிழக்கு பருவமழையையொட்டி நாகை தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்பு மற்றும் மீட்பு துறை டி.ஜி.பி. ரவி ஆய்வு மேற்கொண்டார். அப்போது நிலையத்தில் வைத்திருந்த மரம் வெட்டும் கருவி, கட்டிடம் இடிக்கும் கருவி, ஆபத்து காலத்தில் கதவுகளை உடைக்கும் கருவி உள்ளிட்ட நவீன மீட்பு பணி கருவிகள், தீயணைப்பு வாகனங்கள், பேரிடர் கால நண்பர்கள், ஆபத்து காலங்களில் தீயணைப்பு வீரர்களின் செயல்பாடுகள் ஆகியவை குறித்து ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் அனைத்துத்துறைகளும் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். பேரிடர் காலங்களில் பொதுமக்களுக்கு உதவி செய்ய அனைத்து அலுவலர்களும் தயார்நிலையில் இருக்க வேண்டும் என முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதற்காக தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் துறையின் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து கடலோர மாவட்டங்களில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
உபகரணங்கள் தயார்
வடகிழக்கு பருவமழையால் கடலோர மாவட்டங்களில் இதுவரை எந்த விதமான பாதிப்புகளும் ஏற்படவில்லை. பாதிப்புகள் குறித்து தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை கட்டுபாட்டு எண் 112 கட்டணம் இல்லாமல் தெரிவித்தால் சம்பந்தப்பட்ட நிலையத்தில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வந்து பேரிடர் கால மீட்பு பணிகளில் ஈடுபடுவார்கள்.
பேரிடர் காலத்தில் மீட்பு பணிகளில் ஈடுபட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையில் அனைத்து உபகரணங்களும் தயார் நிலையில் உள்ளது. வடகிழக்கு பருவமழையையொட்டி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையை சேர்ந்த வீரர்களுக்கு விடுமுறை எடுக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
சான்றிதழ் வழங்க பரிந்துரை
பேரிடர் காலங்களில் உதவுவதற்காக நாகப்பட்டினம் மாவட்டத்தில் 7 தீயணைப்பு நிலையங்களில் 7 மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். மேலும் 160 தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். பேரிடர் காலத்தில் சிறப்பாக செயல்படும் தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்களுக்கு சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்க முதல்-அமைச்சரிடம் பரிந்துரை செய்யப்படும். வேளாங்கண்ணி, நாகூர், மயிலாடுதுறை மாவட்டத்தில் தரங்கம்பாடி, பூம்புகார் ஆகிய கடல்பகுதியில் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க கவச உடை அணிந்த நீச்சல் வீரர்கள் நியமிக்கப்படுவார்கள். இதற்காக தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு சுற்றுலா பயணிகளின் உயிரிழப்பை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள 7 தீயணைப்பு நிலையங்களில் அவர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது மாவட்ட தீயணைப்பு அலுவலர் சரவணபாபு, உதவி தீயணைப்பு அலுவலர் துரை, நிலைய தீயணைப்பு வீரர் மொகிசன் உள்பட பலர் உடனிருந்தனர்.