வேலூர்
டாக்டர் தம்பதி வீட்டில் 7 பவுன் நகை, ரூ.10 லட்சம் திருட்டு
|வேலூர் வேலப்பாடியில் டாக்டர் தம்பதி வீட்டில் 7 பவுன் நகை, ரூ.10 லட்சத்தை திருடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
வேலூர் வேலப்பாடியில் டாக்டர் தம்பதி வீட்டில் 7 பவுன் நகை, ரூ.10 லட்சத்தை திருடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
டாக்டர் தம்பதி
வேலூர் வேலப்பாடி பூந்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்ணன் (வயது 52), வேலூர் அரசு மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி சுப்ரியா. இவர் வேலப்பாடியில் கிளினிக் நடத்தி வருகிறார். இந்த தம்பதியினருக்கு 16 வயதில் பிளஸ்-1 படிக்கும் மகள் உள்ளார். கேரள மாநிலம் கொச்சியில் நடந்த டாக்டர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கடந்த 22-ந் தேதி கணவன்-மனைவி இருவரும் வீட்டை பூட்டி விட்டு சென்றனர். இதையொட்டி அவர்களின் மகளை அதே பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் தங்க வைத்தனர்.
டாக்டர் வீட்டில் பணிபுரியும் வேலைக்கார பெண் வழக்கம்போல் காலை 7 மணியளவில் வீட்டிற்கு சென்றார். வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக டாக்டர் மணிகண்ணனுக்கு செல்போனிலும், அந்த பகுதியில் வசிக்கும் அவருடைய உறவினருக்கு நேரில் சென்றும் தகவல் தெரிவித்தார். அதையடுத்து உறவினர் டாக்டர் வீட்டிற்கு வந்து பார்வையிட்டார். இதற்கிடையே மணிகண்ணன் திருட்டு குறித்து போலீசாருக்கு போனில் தகவல் தெரிவித்தார்.
நகை, பணம் திருட்டு
அதன்பேரில் வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு, தெற்கு குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஷியாமளா, பாகாயம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் அங்கு சென்று உறவினருடன் வீட்டிற்குள் சென்று பார்வையிட்டனர். அங்கு அறைகளில் ஆங்காங்கே பொருட்கள், துணிகள் மற்றும் பீரோவின் அருகே பணக்கட்டுகள் சிதறி கிடந்தன. பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 7 பவுன் நகை மற்றும் ரூ.10 லட்சம் ஆகியவை திருட்டு போயிருந்தது. பீரோவின் அருகே கிடந்த பணக்கட்டுகளில் ரூ.5 லட்சம் இருந்தது.
இதுகுறித்து வீட்டு வேலைக்காரி, அக்கம், பக்கத்தில் வசிப்பவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, வீட்டில் பதிவாகியிருந்த மர்மநபர்களின் கைரேகை மாதிரிகள் சேகரிக்கப்பட்டது. போலீஸ் மோப்பநாய் டாக்டர் தம்பதி வீட்டில் மோப்பம் பிடித்து விட்டு வேலப்பாடி பஸ்நிறுத்தம் வரை ஓடிச்சென்று நின்று விட்டது.
மர்மநபர்களுக்கு வலைவீச்சு
வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்ய முயன்றனர். ஆனால் மர்மநபர்கள் கண்காணிப்பு கேமராக்களின் அனைத்து காட்சிகளும் சேகரித்து வைக்கப்படும் டிஸ்க்கையும் எடுத்து சென்றிருந்தனர். இதையடுத்து போலீசார் எதிர் வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.
அதில் நேற்று முன்தினம் அதிகாலை 2 மணியளவில் 2 வாலிபர்கள் டாக்டர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன. அந்த வாலிபர்கள் குறித்து வேலப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் போலீசார் விசாரணை நடத்தினர்.
மேலும் வேலப்பாடி, பூந்தோட்டம் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் 2 பேரின் உருவங்கள் பதிவாகி உள்ளதா என்று போலீசார் ஆய்வு செய்தனர். டாக்டர் தம்பதி வீட்டில் கைவரிசை காட்டிய மர்மநபர்கள் 2 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
இதற்கிடையே கேரளாவில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு வந்த டாக்டர் தம்பதியினர், அங்கிருந்து காரில் வேலூருக்கு இரவு 8 மணியளவில் வந்தடைந்தனர். வீட்டில் திருட்டு போன நகை, பணத்தை கணக்கிட்டு புகார் அளிக்கிறோம் என்று டாக்டர் தம்பதியினர் தெரிவித்துள்ளனர். அவர்கள் புகார் அளித்த பின்னரே திருட்டு போன நகை, பணம் குறித்து முழுமையான விவரம் தெரியவரும் என்று போலீசார் கூறினர்.