அரியலூர்
வீட்டில் கணவருடன் தூங்கிய பெண்ணிடம் 7 பவுன் தாலிச்சங்கிலி பறிப்பு
|வீட்டில் கணவருடன் தூங்கிய பெண்ணிடம் 7 பவுன் தாலிச்சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.
செந்துறை:
தாலிச்சங்கிலி பறிப்பு
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள குறிச்சிகுளம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி தேவகி. இவர்கள் நேற்று முன்தினம் இரவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது பனிக்குல்லா அணிந்திருந்த 2 பேர், வெங்கடேசனின் வீட்டிற்குள் புகுந்து தேவகி கழுத்தில் கிடந்த 7 பவுன் தாலிச்சங்கிலியை பறித்தனர். இதனால் திடுக்கிட்டு கண் விழித்த தேவகி, மர்ம நபர்களை கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார்.
ஆடுகளை திருட முயற்சி
சத்தம் கேட்டு கண் விழித்த வெங்கடேசன், அந்த மர்ம நபர்களை பிடிக்க முயற்சி செய்தார். ஆனால் அவரை தள்ளிவிட்டு 2 பேரும் தப்பி ஓடிவிட்டனர். இதேபோல் அருகே உள்ள வீட்டின் கொட்டகையில் கட்டியிருந்த ஆடுகளை மர்ம நபர்கள் திருட முயன்றனர்.
அப்போது வீட்டில் உள்ளவர்கள் சத்தம் போட்டதால் அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் மர்ம நபர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்கள் அருகே இருந்த கரும்பு காட்டுக்குள் புகுந்து தப்பி ஓடிவிட்டனர்.
போலீசார் விசாரணை
இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் குவாகம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. தேவகியின் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.