சென்னை
சாலையில் தலைகுப்புற கவிழ்ந்த ஆட்டோ - டிரைவர் உள்பட 7 பேர் காயம்
|சென்னை வியாசர்பாடி ராமலிங்கம் கோவில் மேம்பாலத்தின் கீழ் தலைகுப்புற ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் உள்பட 7 பேர் காயம் அடைந்தனர்.
சென்னை வியாசர்பாடி முல்லை நகரில் இருந்து 6 பேரை ஏற்றிக்கொண்டு ஆட்டோ ஒன்று மூலக்கொத்தளம் நோக்கி வந்து கொண்டிருந்தது. ஆட்டோவை வியாசர்பாடியைச் சேர்ந்த டிரைவர் பவுல் என்பவர் ஓட்டி வந்தார்.
வியாசர்பாடி ராமலிங்கம் கோவில் மேம்பாலத்தின் கீழ் வேகமாக வந்த ஆட்டோ, முன்னால் சென்ற மோட்டார்சைக்கிளை முந்திச்செல்ல முயன்றது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ, சாலையில் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் ஆட்டோ நொறுங்கியது.
டிரைவர் பவுலுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. மேலும் ஆட்டோவில் பயணம் செய்த 6 பேருக்கு காயம் ஏற்பட்டது. 7 பேரும் அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.
சாலையில் ஆட்டோ கவிழ்ந்து கிடந்ததால் அந்த பகுதியில் சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அங்கு வந்த புளியந்தோப்பு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், சாலையில் கவிழ்ந்து கிடந்த ஆட்டோவை அப்புறப்படுத்தினர். ேமலும் இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.