< Back
மாநில செய்திகள்
சேலையூரில் போலீஸ் வாகன சோதனையில் நாட்டு துப்பாக்கி, வெடிகுண்டுடன் 7 பேர் சிக்கினர்
சென்னை
மாநில செய்திகள்

சேலையூரில் போலீஸ் வாகன சோதனையில் நாட்டு துப்பாக்கி, வெடிகுண்டுடன் 7 பேர் சிக்கினர்

தினத்தந்தி
|
21 Aug 2022 5:18 PM IST

சேலையூரில் போலீஸ் வாகன சோதனையில் நாட்டு துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுடன் 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட சந்தோஷபுரம் பகுதியில் உள்ள சமுதாய நலக்கூடம் அருகே நேற்று சேலையூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் வந்த 7 பேர் போலீசாரை கண்டவுடன் வாகனங்களை திருப்பிக்கொண்டு தப்பிச்செல்ல முயற்சித்தனர். இதனை கண்ட போலீசார் அவர்களை துரத்திச்சென்று மடக்கிப்பிடித்தனர்.

விசாரணையில் அவர்கள் பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்த ஹரிபிரசாத் (வயது 32), யுவராஜ் (30), திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த பாரதி (34), மாடம்பாக்கம் பகுதியை சேர்ந்த கீர்த்திராஜன் (22), கீழப்பாக்கம் பகுதியை சேர்ந்த விஸ்வநாதன் (30), விழுப்புரத்தை சேர்ந்த மணிகண்டன் (33), பெருங்குடியை சேர்ந்த நாகராஜ் (27) என்பது தெரிய வந்தது.

இதையடுத்து அவர்களை சோதனை செய்தபோது பாரதி என்பவரிடம் ஒரு நாட்டு துப்பாக்கி மற்றும் நாட்டு வெடிகுண்டு ஒன்றும் இருந்தது. மேலும் ஹரிபிரசாத்திடம் 1¾ கிலோ கஞ்சாவும், யுவராஜியிடம் ஒரு கத்தியும் இருந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், 7 பேரையும் கைது செய்தனர்.

இதில் பாரதி மீது கொலை மற்றும் கொலை முயற்சி என 4 வழக்குகளும், ஹரிபிரசாத் மற்றும் யுவராஜ் ஆகியோர் மீது தலா 2 கொலை முயற்சி வழக்கும், 2 சண்டை வழக்குகளும், நாகராஜ் மீது 2 கொலை முயற்சி வழக்குகளும், 4 சண்டை வழக்குகளும் நிலுவையில் உள்ளது விசாரணையில் தெரியவந்தது.

மேலும் செய்திகள்