< Back
மாநில செய்திகள்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிறுமிகள் உட்பட 7 பேருக்கு எலி காய்ச்சல் பாதிப்பு
மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிறுமிகள் உட்பட 7 பேருக்கு எலி காய்ச்சல் பாதிப்பு

தினத்தந்தி
|
8 July 2024 4:14 PM IST

எலி காய்ச்சல் காரணமாக வடதொரசலூர் கிராமத்தில் சிறப்பு மருத்துவ முகாம் அமைத்து மருத்துவர்கள் தீவிர பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே வடதொரசலூர் கிராமம் அமைந்துள்ளது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அந்த கிராமத்தில் உள்ள மூப்பனார் கோவில் தெருவில் வசித்து வரும் பொதுமக்கள் சிலருக்கு திடீரென வாந்தி, மயக்கம் மற்றும் லேசான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அனைவரும் தியாகதுருகம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். பின்னர் 7 பேர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர்களுக்கு ரத்தப் பரிசோதனை செய்த போது, எலி காய்ச்சல் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரிய வந்தது. குடிநீர் மூலம் ஏற்பட்ட தொற்று காரணமாக இவர்களுக்கு எலி காய்ச்சல் பரவியது தெரிய வந்துள்ளது. இதனால் அக்கிராமத்தை சேர்ந்த மேலும் பலருக்கு நோய் பரவி இருக்கக்கூடிய அபாயம் இருப்பதாக அச்சம் ஏற்பட்டது.

இதையடுத்து வடதொரசலூர் கிராமத்தில் சிறப்பு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு, மருத்துவர்கள் தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் கிராமம் முழுவதும் தூய்மைப்படுத்தும் பணியும், கிருமிநாசினி தெளிக்கும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்