கன்னியாகுமரி
ஓட்டலில் 'லிப்ட்' பழுதானதால் நடுவழியில் குழந்தைகள் உள்பட 7 பேர் பரிதவிப்பு
|நாகர்கோவிலில் உள்ள ஒரு ஓட்டலில் லிப்ட் பழுதாகி நடுவழியில் நின்றதால் அதிலிருந்த 2 குழந்தைகள் உள்பட 7 பேர் பரிதவித்தனர். அவர்களை தீயணைப்பு வீரர்கள் ½ மணி நேரம் போராடி மீட்டனர்.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் உள்ள ஒரு ஓட்டலில் லிப்ட் பழுதாகி நடுவழியில் நின்றதால் அதிலிருந்த 2 குழந்தைகள் உள்பட 7 பேர் பரிதவித்தனர். அவர்களை தீயணைப்பு வீரர்கள் ½ மணி நேரம் போராடி மீட்டனர்.
வளைகாப்பு நிகழ்ச்சி
நாகர்கோவில் கோர்ட்டு ரோடு பகுதியில் ஒரு ஓட்டலுடன் மினி மண்டபம் செயல்பட்டு வருகிறது. இந்த மண்டபம் 2-வது தளத்தில் உள்ளது. இங்கு நேற்று காலையில் வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்து கொள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் உள்பட பலர் வந்திருந்தனர். அவர்கள் லிப்ட் மூலமும் படிக்கட்டு மூலமும் 2-வது தளத்தில் உள்ள மண்டபத்துக்கு சென்று கொண்டிருந்தனர்.
இந்தநிலையில் வடசேரி கிருஷ்ணன்கோவில் திருப்பதி நகரை சோ்ந்த சக்தி கணேஷன் (வயது 35), அவருடைய மனைவி சங்கவி (29), 7 மாத பெண் குழந்தை மற்றும் வடசேரி பகுதியை சேர்ந்த சகிலா, அவருடைய கணவர் மற்றும் 5 வயதுடைய குழந்தை, ஓட்டல் காவலாளி மணிகண்டன் என மொத்தம் 7 பேர் லிப்டில் 2-வது தளத்துக்கு சென்று கொண்டிருந்தனர். லிப்டை காவலாளி மணிகண்டன் இயக்கினார்.
நடுவழியில் நின்ற லிப்ட்
லிப்ட் முதல் தளத்தை கடந்து சென்ற ஓரிரு நொடியில் நடுவழியில் நின்றது. இதனால் அதில் இருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். காவலாளி மணிகண்டன் லிப்டை இயக்க முயன்றார். ஆனால் அது நகராமல் அங்கேயே நின்றது. இதையடுத்து லிப்டில் இருந்தவர்கள் தங்களது உறவினர்களுக்கும், ஓட்டல் நிர்வாகத்திற்கும் செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர்.
உடனே ஓட்டல் நிர்வாகத்தினர் விரைந்து வந்து லிப்டை இயக்க பல வகையில் முயன்றனர். ஆனால் முடியவில்ைல. பின்னர் இதுகுறித்து நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
½ மணி நேரம் போராடி மீட்பு
மாவட்ட உதவி தீயணைப்பு அதிகாரி துரை தலைமையில் வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் நாகர்கோவில் பகுதியில் உள்ள பிரபல துணிக்கடையில் உள்ள லிப்ட் ஆபரேட்டர்கள் மற்றும் டெக்னீசியன்களும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.
தொடர்ந்து லிப்டில் இருந்தவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்களும், டெக்னீசியன்களும் ஈடுபட்டனர். இதற்காக லிப்டை தரை தளத்திற்கு கொண்டு வந்தனர். முதலில் லிப்டில் சிக்கியிருந்த 2 குழந்தைகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். தொடர்ந்து லிப்டின் மேல் கூரை மற்றும் கதவை எந்திரம் மூலம் வெட்டி அகற்றி சுமார் ½ மணி நேரம் போராடி அதில் இருந்த அனைவரையும் பத்திரமாக மீட்டனர்.
கண்ணீர் மல்க நன்றி
மீட்கப்பட்ட அனைவரும் தீயணைப்பு வீரர்களுக்கும், டெக்னீசியன்களுக்கும் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட ஓட்டல் நிர்வாகத்திடம் லிப்டை சரியாக சீரமைத்து பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்தினர். ஓட்டல் லிப்டில் 2 குழந்தைகள் உள்பட 7 பேர் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.