< Back
மாநில செய்திகள்
காரைக்குடி மீன் வியாபாரி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு 3 மாணவர்கள் உள்பட 7 பேர் கைது
சிவகங்கை
மாநில செய்திகள்

காரைக்குடி மீன் வியாபாரி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு 3 மாணவர்கள் உள்பட 7 பேர் கைது

தினத்தந்தி
|
31 Aug 2023 12:45 AM IST

காரைக்குடி மீன் வியாபாரி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் 3 மாணவர்கள் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

காரைக்குடி,

காரைக்குடி மீன் வியாபாரி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் 3 மாணவர்கள் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

பெட்ரோல் குண்டு வீச்சு

காரைக்குடி அண்ணா நகரை சேர்ந்தவர் பழனி முருகன் (வயது 52). மீன் வியாபாரி. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பழனி முருகன் பரமக்குடி அருகே கிராமத்தில் உள்ள தங்களது குலதெய்வம் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றுள்ளார். அன்று இரவு காரைக்குடி அண்ணாநகர் வீட்டில் பழனி முருகன் குடும்பத்தார் இருந்துள்ளனர். நள்ளிரவில் அனைவரும் தூங்கிக்கொண்டிருந்த நேரத்தில் வீட்டு வாசலில் பயங்கர வெடி சத்தம் கேட்டது. இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவருடைய குடும்பத்தினர் வெளியே வந்து பார்த்தபோது வீட்டு வாசலில் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது.

உடனடியாக அவர்கள் தீயை அணைத்தனர். இது குறித்து காரைக்குடி வடக்கு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். அதில் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்தது.

போலீசார் விசாரணை

இந்த சம்பவம் தொடர்பாக காரைக்குடி உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் விசாரணை நடத்தி குற்றவாளிகளை பிடிக்க போலீஸ் தனிப்படை அமைத்தார். அதன்படி வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் இளையராஜா, ராமசுப்பிரமணியன் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி அப்பகுதி கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு மேற்கொண்டனர். மேலும் சம்பவம் நடந்த நேரத்தில் அப்பகுதியில் நடந்த செல்போன் உரையாடல்களின் எண்களை கொண்டும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

7 பேர் கைது

போலீசாரின் தொடர் விசாரணையில் மீனாட்சிபுரத்தை சேர்ந்த கறிக்கடையில் வேலை செய்யும் ரியாஸ்(20), 3 கல்லூரி மாணவர்கள் மற்றும் 18 வயதுடைய 3 பேர் என 7 பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இவர்கள் 7 பேரும் நள்ளிரவில் காரில் வந்து பழனி முருகன் வீட்டில் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பி சென்றனர்.

பழனி முருகன் மகன் ஹரிகரனுக்கும், இவர்களுக்கும் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக பெட்ரோல் குண்டுகளை வீசியதும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 7 பேரும் கைது செய்யப்பட்ட்டனர். இந்த சம்பவத்திற்கு பயன்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்