< Back
மாநில செய்திகள்
கேதார்நாத்: ஹெலிகாப்டர் விபத்தில் 7 பக்தர்கள் பலி - 3 பேர் சென்னையை சேர்ந்தவர்கள்
மாநில செய்திகள்

கேதார்நாத்: ஹெலிகாப்டர் விபத்தில் 7 பக்தர்கள் பலி - 3 பேர் சென்னையை சேர்ந்தவர்கள்

தினத்தந்தி
|
19 Oct 2022 4:20 AM IST

கேதார்நாத்தில் இருந்து திரும்பியபோது ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி சென்னையை சேர்ந்த 3 பேர் உள்பட 7 பக்தர்கள் பலியாகினர்.

டேராடூன்,

உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்தில் இருந்து திரும்பியபோது ஹெலிகாப்டர் விபத்தில் சென்னையை சேர்ந்த 3 பேர் உள்பட 7 பேர் பலியானார்கள். ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஹெலிகாப்டர் வெடித்து சிதறியது

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத், மிகவும் புகழ்பெற்ற புனித தலம் ஆகும். கேதார்நாத்-குப்தகாசி இடையே ஆர்யன் ஏவியேசன் என்ற தனியார் நிறுவனம், ஹெலிகாப்டர் சேவையை இயக்கி வருகிறது.

வசதியான பக்தர்கள், அந்த ஹெலிகாப்டர் சேவையை பயன்படுத்தி கோவிலுக்கு சென்று விட்டு திரும்புவது வழக்கம்.

அதுபோல், நேற்று காலை கேதார்நாத் கோவிலில் சாமி தரிசனம் முடித்த 6 பக்தர்கள், குப்தகாசிக்கு அந்த ஹெலிகாப்டரில் புறப்பட்டனர். வழியில், ருத்ரபிரயாக் மாவட்டம் கருட் சாட்டி மலைப்பகுதியில் வந்தபோது, அந்த ஹெலிகாப்டர் திடீரென வெடித்துச் சிதறியது. காலை 11.45 மணிக்கு விபத்து நடந்தது.

7 பேர் பலி

இந்த கோர விபத்தில், ஹெலிகாப்டரில் இருந்த 6 பக்தர்களும், விமானியும் பலியானார்கள். மோசமான வானிலை காரணமாக, எதிர்புறத்தில் எதுவுமே தெரியாததால் இந்த விபத்து நடந்ததாக தெரிகிறது.

தேசிய பேரிடர் மீட்புப்படையினரும், உத்தரகாண்ட், டெல்லி ஆகிய மாநிலங்களின் பேரிடர் மீட்புப்படையினரும் துரிதமாக செயல்பட்டனர். 7 பேரின் உடல்களையும் கேதார்நாத் ஹெலிகாப்டர் தளத்துக்கு கொண்டு வந்தனர்.

சென்னையை சேர்ந்தவர்கள்

பலியான 7 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டன. அவர்களில் 3 பேர் சென்னை அண்ணாநகரை சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது. அவர்களின் பெயர்கள் பிரேம்குமார், கலா (வயது 60), சுஜாதா (56) என்று உத்தரகாண்ட் மாநில போலீசார் தெரிவித்தனர்.

குஜராத்தை சேர்ந்த பூர்வா ராமானுஜ் (26), கிரித்தி பிரார் (30), உர்வி பிரார் (25) ஆகியோரும் பலியானோரில் அடங்குவர். பலியான விமானியின் பெயர் அனில்சிங் (57). மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர்.

மாநில அரசுடன் தொடர்பு கொண்டு நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருவதாக மத்திய சிவில் விமான போக்குவரத்து மந்திரி ஜோதிர்ஆதித்ய சிந்தியா கூறியுள்ளார்.

இரங்கல்

இதற்கிடையே, பலியானோரின் குடும்பங்களுக்கு ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்ட இரங்கல் செய்தியில், ''கேதார்நாத் தாம் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் விமானி உள்பட பக்தர்கள் சிலர் பலியானது மிகவும் துயரமானது. பலியானோர் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்'' என்று கூறியுள்ளார்.

பிரதமர் மோடி வெளியிட்ட இரங்கல் செய்தியில், ''உத்தரகாண்ட் ஹெலிகாப்டர் விபத்தை அறிந்து வேதனை அடைந்தேன். எனது நினைவுகள், பலியான குடும்பங்களை சுற்றியே இருக்கும்'' என்று கூறியுள்ளார். ஜோதிர்ஆதித்ய சிந்தியா, உத்தரகாண்ட் மாநில முதல்-மந்திரி புஷ்கர்சிங் தாமி ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

*************************************

மேலும் செய்திகள்