செங்கல்பட்டு
கிளிகளை கூண்டுகளில் அடைத்து ஜோசியம் பார்த்த 7 பேர் கைது- வனத்துறை நடவடிக்கை
|மாமல்லபுரம் கடற்கரை சாலையில் கிளிகளை கூண்டுகளில் அடைத்து ஜோசியம் பார்த்த 7 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கடற்கரை சாலை அர்ச்சுனன் தபசு, ஐந்துரதம், கோவளம் கடற்கரை பகுதிகளில் காடுகள், வயல்வெளிகள், தோட்டங்களில் இருந்து பிடித்து வரப்பட்ட பச்சை கிளிகளின் இறக்கைகளை வெட்டி மர கூண்டுகளில் அடைத்து கிளி ஜோசியக்காரர்கள் துன்புறுத்துவதாக செங்கல்பட்டு மாவட்ட வனத்துறைக்கு புகார்கள் வந்தது. இதையடுத்து திருப்போரூர் வனச்சரக அலுவலர் கல்யாண் தலைமையில் வனக்காவலர்கள் பிரகாசம், சரவணகுமார், பெருமாள், கணேஷ்குமார் ஆகியோர் கொண்ட வனத்துறை அதிகாரிகள் ஒரு வாகனத்தில் வந்து திடீர் ஆய்வு செய்தனர். அப்போது கடற்கரை பகுதி, அர்ச்சுனன் தபசு, வெண்ணை உருண்டைக்கல் உள்ளிட்ட பகுதிகளில் சாலை ஓரம் அமர்ந்து பச்சை கிளிகளை மர கூண்டில் அடைத்து சுற்றுலா பயணிகளிடம் கிளி ஜோசியத்தில் ஈடுபட்ட சுப்பிரமணியன் (வயது 60), தங்கமாரி (50), வள்ளிநாயகம் (29), மாரியப்பன் (43), முப்புடாதி (36), குமார் (40), பரமசிவன் (55) ஆகியோரை கைது செய்தனர். அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
தென் மாவட்டங்களை சேர்ந்த இவர்கள் மாமல்லபுரத்தில் வீடு வாடகை எடுத்து வசித்து வருகின்றனர். கிளி ஜோசியக்காரர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட கிளிகளை இள்ளலூர் காப்பு காட்டில் வனத்துறையினர் விட்டனர்.