< Back
மாநில செய்திகள்
பாறைகள் வெட்டி கடத்தல்; 7 பேர் கைது
சேலம்
மாநில செய்திகள்

பாறைகள் வெட்டி கடத்தல்; 7 பேர் கைது

தினத்தந்தி
|
7 Oct 2023 12:31 AM IST

சேலத்தில் பாறைகளை வெட்டி கடத்தியதாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 2 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பாறைகள் வெட்டி கடத்தல்

சேலம் அம்மாப்பேட்டை வரகம்பாடி பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள கரடுகளில் அனுமதி பெறாமல் சிலர் பாறைகளை கற்களாக வெட்டி கடத்துவதாக வருவாய்த்துறை அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், அம்மாப்பேட்டை போலீஸ் உதவி கமிஷனர் செல்வம் நேற்று அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார்.

அப்போது, வரகம்பாடி சக்திநகரில் பாறைகளை வெட்டி லாரிகளில் சிலர் ஏற்றிக்கொண்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் மடக்கி பிடித்து பாறைகளை வெட்டுவதற்கு அனுமதி பெறப்பட்டுள்ளதா? என்று விசாரித்தனர். மேலும், இது சம்பந்தமாக வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து அங்கு வரவழைக்கப்பட்டனர். ஆனால் அரசு புறம்போக்கு நிலத்தில் பாறைகளை வெட்டி கடத்தியது தெரியவந்தது.

7 பேர் கைது

இதையடுத்து அங்கிருந்த 2 லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஜெபசெல்வம், சிவராஜ், அய்யப்பன், வடிவேல், அண்ணாதுரை, கருப்பசாமி, யுவராஜ் ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்