சென்னை
அம்பத்தூரில் திருமணமான 7 மாதத்தில் கர்ப்பிணி மர்மசாவு - சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் தாய் புகார்
|அம்பத்தூரில் திருமணமான 7 மாதத்தில் கர்ப்பிணி மர்மமாக இறந்தார். மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் தாய் புகார் செய்தார்.
சென்னையை அடுத்த சோழிங்கநல்லூர், திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் தேவசகாயம். இவருடைய மனைவி ராணி. இவர்களுக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். இவர்களில் மூத்த மகள் பிரதீபா (வயது 24) என்பவருக்கும், அம்பத்தூர் ஜ.சி.எப். காலனியை சேர்ந்த ஜேம்ஸ் என்பவருக்கும் கடந்த மே மாதம் திருமணம் நடைபெற்றது. ஜேம்ஸ் சொந்தமாக தொழில் செய்து வருகிறார்.
தற்போது பிரதீபா, 4 மாத கர்ப்பமாக உள்ளார். நேற்று முன்தினம் மதியம் பிரதீபா, குளியல் அறையில் வழுக்கி விழுந்துவிட்டதாகவும், அவளை ஆஸ்பத்திரியில் சேர்த்து இருப்பதாகவும் பிரதீபாவின் தாய் ராணிக்கு ஜேம்ஸ் போனில் தகவல் தெரிவித்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பிரதீபா குடும்பத்தினர், அம்பத்தூரில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சென்று பார்த்தனர். அங்கு பிரதீபா உயிரிழந்து இருப்பது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ராணி, அம்பத்தூர் எஸ்டேட் போலீசில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
வரதட்சணை விஷயமாக ஜேம்ஸ் வீட்டுக்கும், எங்களுக்கும் சில நாட்களாக பிரச்சினை இருந்து வருகிறது. 4 மாத கர்ப்பிணியான எனது மகள், கடந்த 10 நாட்களுக்கு முன்பு எங்கள் வீட்டுக்கு வந்தாள். கடந்த 21-ந் தேதி வீட்டுக்கு வந்த ஜேம்ஸ், எனது மகள் பிரதீபாவை அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.
இந்தநிலையில் எனது மகள் குளியல் அறையில் வழுக்கி விழுந்துவிட்டதாக போன் வந்தது. வந்து பார்த்தால் எனது மகள் உயிரிழந்து இருப்பது தெரியவந்தது. எனது மகள் சாவில் சந்தேகம் உள்ளது. இது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி இருந்தார்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ேமலும் பிரதீபாவுக்கு திருமணம் ஆகி 7 மாதமே ஆவதால் இதுபற்றி ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.