< Back
மாநில செய்திகள்
பெண்ணிடம் 7½ பவுன் சங்கிலி பறிப்பு
கரூர்
மாநில செய்திகள்

பெண்ணிடம் 7½ பவுன் சங்கிலி பறிப்பு

தினத்தந்தி
|
13 July 2023 11:54 PM IST

கரூரில் பால் பாக்கெட் வாங்குவது போல் நடித்து பெண்ணிடம் 7½ பவுன் சங்கிலியை பறித்து சென்ற வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பால் வியாபாரம்

கரூர் நரசிம்மபுரம் மேற்கு பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மனைவி சம்பூர்ணம் (வயது 58). இந்த தம்பதி தங்களது வீட்டின் தரைத்தளத்தில் ஆவின் மற்றும் பல்வேறு தனியார் நிறுவனங்களின் பால் பாக்கெட்டுகளை வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று அதிகாலை சம்பூர்ணம் பால் வியாபாரத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது, 30 வயது மதிக்கத்தக்க 2 வாலிபர்கள் ஹெல்மெட் அணிந்து கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்தனர். பின்னர் வாலிபர் ஒருவர் இறங்கி சம்பூர்ணத்திடம் பால் பாக்கெட் வேண்டும் என கேட்டுள்ளார்.

7½ பவுன் சங்கிலி பறிப்பு

அப்போது சம்பூர்ணம் பால் பாக்கெட்டை எடுத்தபோது, அவர் கண் இமைக்கும் நேரத்தில் அந்த வாலிபர் சம்பூர்ணம் கழுத்தில் அணிந்திருந்த 7½ பவுன் தாலியுடன் கூடிய தங்கசங்கிலியை பறித்துக் கொண்டு, அவரை கீழே தள்ளி விட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சம்பூர்ணம் திருடன்... திருடன்... என சத்தம்போட்டார். இவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.

வலைவீச்சு

அதற்குள் அந்த வாலிபர், தங்க சங்கிலியுடன் மோட்டார் சைக்கிளில் தயாராக இருந்த மற்றொரு வாலிபருடன் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதுகுறித்து சம்பூர்ணம் கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்துல்லா வழக்குப்பதிந்து, 2 வாலிபர்களையும் வலைவீசி தேடி வருகிறார். அதிகாலையில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்