< Back
மாநில செய்திகள்
பெண்களிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.7 லட்சம் நகை கொள்ளை
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

பெண்களிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.7 லட்சம் நகை கொள்ளை

தினத்தந்தி
|
27 May 2022 12:50 AM IST

உளுந்தூர்பேட்டையில் வீடு புகுந்து பெண்களிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.7 லட்சம் நகையை முகமூடி கும்பல் கொள்ளையடித்து சென்றது.

உளுந்தூர்பேட்டை,


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள வெள்ளையூர் கிராமத்தை சேர்ந்தவர் அப்துல்ரஹீம். இவரது மனைவி பல்கீஸ்பீ. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனா். இதில் முதல் மகன் சவுதியிலும், 2-வது மகன் உஸ்மான் என்பவர் துபாயிலும் வேலைபாா்த்து வருகின்றனர்.

இதனால் வீட்டில் அப்துல்ரஹீம், அவரது மனைவி பல்கீஸ்பீ மற்றும் 2-வது மருமகள் ஷேக்கா ஆகியோா் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அப்துல்ரகீம் நேற்று மாலை தொழுகை செய்வதற்காக அருகில் உள்ள பள்ளிவாசலுக்கு சென்றார்.

இதைநோட்ட மிட்ட முகமூடி அணிந்து வந்த 3 பேர் கொண்ட கும்பல், திடீரென அப்துல்ரஹீம் வீட்டுக்குள் புகுந்து கதவை உள்பக்கமாக பூட்டியது. இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த பல்கீஸ்பீயும், ஷேக்காவும் நீங்கள் யார்?, வெளியில் செல்லுங்கள் என்று கூறினர்.

உடனே அந்த கும்பல், தாங்கள் கொண்டு வந்திருந்த கத்தியை காட்டி 2 பேரையும் மிரட்டியது. மேலும் அவர்களின் கழுத்தில் அணிந்திருந்த நகைகளை கொடுக்கும்படி கேட்டனர்.

20 பவுன் நகை

இதில் செய்வது அறியாது தவித்த அவர்கள் தாங்கள் அணிந்திருந்த 3 பவுன் நகைகளை கழட்டி அந்த கும்பலிடம் கொடுத்தனர். இதனிடையே ஷேக்கா தனது செல்போனில் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்க முயன்றார். இதைபார்த்த அந்த கும்பல், செல்போனை பிடுங்கி கீழே போட்டு உடைத்தது.

பின்னர் அவர்கள் ஷேக்காவின் கைகளை கட்டி அங்குள்ள ஒரு அறையில் தள்ளிவிட்டனர். இதையடுத்து பல்கீஸ் பியையும் அதே அறையில் தள்ளிவிட்டனர். தொடர்ந்து அந்த கும்பல் பக்கத்து அறையில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 17 பவுன் நகையை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பிச்சென்றது.

கொள்ளை போன நகைகளின் மொத்த மதிப்பு ரூ.7 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்த தகவலின் பேரில் உளுந்தூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கொள்ளை சம்பவம் குறித்து பல்கீஸ்பீ, ஷேக்கா ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து முகமூடி கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்