< Back
மாநில செய்திகள்
இலங்கையில் இருந்து கடத்தி வந்த 7½ கிலோ தங்கக்கட்டிகள் பறிமுதல்
மாநில செய்திகள்

இலங்கையில் இருந்து கடத்தி வந்த 7½ கிலோ தங்கக்கட்டிகள் பறிமுதல்

தினத்தந்தி
|
12 Oct 2023 5:50 AM IST

இலங்கையில் இருந்து படகில் கடத்தி வந்த 7½ கிலோ தங்கக்கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. காரில் சென்னைக்கு கொண்டு வந்தபோது நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் இந்த நடவடிக்கை எடுத்தனர்.

மதுரை,

ராமநாதபுரம் மாவட்டத்துக்கு இலங்கையில் இருந்து கடல் வழியாக தங்கக்கட்டிகள் அவ்வப்போது கடத்தி கொண்டு வரப்படுகின்றன. அவ்வாறு கடத்தி வந்த தங்கக்கட்டிகள் தேவிப்பட்டினத்தில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததாகவும், அவற்றை கார் மூலம் சென்னையை நோக்கி கடத்திச் செல்வதாகவும் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது.

அதைத்தொடர்ந்து வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தேவிப்பட்டினத்தில் இருந்து சென்ற அந்த காரை நடுவழியில் மடக்கி நிறுத்தினர். அதை சோதனை செய்தபோது, அதில் பதுக்கி வைத்திருந்த சுமார் 7½ கிலோ தங்கக்கட்டிகளை பறிமுதல் செய்தனர். விசாரணையில் கடத்தல் தங்கம் என தெரியவந்ததால், அந்த காரில் இருந்த 2 பேரையும் கைது செய்தனர்.

ரூ.4.47 கோடி

இதுதொடர்பாக அதிகாரிகள் கூறியதாவது:-

இந்த தங்கக்கட்டிகள் இலங்கையில் இருந்து படகு மூலம் கடத்தி வந்துள்ளார்கள். அங்கு கடத்தல் ஏஜெண்டுகளிடம் இருந்து வாங்கி இருக்கிறார்கள்.

சென்னையில் தொழில் அதிபர் ஒருவரிடம் கொடுப்பதற்காக காரில் கொண்டு செல்லும் வழியில் பிடிபட்டனர். பறிமுதல் செய்த தங்கக்கட்டிகளின் மதிப்பு ரூ.4.47 கோடி இருக்கும்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

பிடிபட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்