< Back
மாநில செய்திகள்
திருவாலங்காடு ரெயில் நிலையம் அருகே ரெயில்வே சிக்னல் வயரை திருடிய வழக்கில் 7 பேர் கைது
திருவள்ளூர்
மாநில செய்திகள்

திருவாலங்காடு ரெயில் நிலையம் அருகே ரெயில்வே சிக்னல் வயரை திருடிய வழக்கில் 7 பேர் கைது

தினத்தந்தி
|
17 Jun 2022 1:55 PM IST

திருவாலங்காடு ரெயில் நிலையம் அருகே ரெயில்வே சிக்னல் வயரை திருடிய வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ரெயில் நிலையத்தை அடுத்த தொழுதாவூர் ரயில்வே கேட் அருகே ரெயில்வே துறையினரால் சிக்னலுக்கு பொருத்தப்பட காப்பர், அலுமினியம் கலந்த வயர் 2 ரோல்கள் வைக்கப்பட்டிருந்தது.

இதை நோட்டமிட்ட மர்மநபர்கள் கடந்த மாதம் திருடினர். ரோலுடன் கூடிய ஒரு பகுதி வயரை ரெயில்வே கேட் அருகே உள்ள பழுதடைந்த கிணற்றில் வீசி விட்டு சென்றனர். மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் ஆய்வு நடத்தினர். அப்போது ரெயில்வே கேட் அருகே உள்ள பழுதடைந்த கிணற்றில் இருந்த வயரை ரெயில்வே போலீசார் மீட்டனர்.

இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து சென்னை ரெயில்வே கோட்ட முதுநிலை ஆணையர் செந்தில் குமரேசன் உத்தரவின் பேரில் அரக்கோணம் கோட்ட உதவி ஆணையர் ஏகே.பிரித் தலைமையில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர்கள் மதுசூதன ரெட்டி, பூமிநாதன் மற்றும் திருவள்ளூர் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் செபஸ்டின் தலைமையிலான போலீசார் 15 நாட்களாக தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த அரக்கோணத்தை அடுத்த சின்ன மோசூர் கிராமத்தை சேர்ந்த 18 வயதானவர், விக்னேஷ்வரன் (வயது 21), ஜீவா (38), திருவலாங்காடு சின்னம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்த சாரதி ( 22), தினேஷ் ( 19), திருவள்ளூர் சேர்ந்த முத்துகிருஷ்ணன் ( 37), சுபாஷ் ( 22) ஆகியோரை நேற்று முன்தினம் ரெயில்வே போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான வயர் கைப்பற்றப்பட்டது.

மேலும் செய்திகள்