< Back
மாநில செய்திகள்
6-ந் தேதி சர்வதேச வேட்டி தினம்தமிழர்களின் பாரம்பரிய உடைகள்  அணிவதில் ஈர்ப்பு இருக்கிறதா?இளைய சமுதாயத்தினர் கருத்து
தேனி
மாநில செய்திகள்

6-ந் தேதி சர்வதேச வேட்டி தினம்தமிழர்களின் பாரம்பரிய உடைகள் அணிவதில் ஈர்ப்பு இருக்கிறதா?இளைய சமுதாயத்தினர் கருத்து

தினத்தந்தி
|
4 Jan 2023 12:15 AM IST

தமிழர்களின் பாரம்பரிய உடைகள் அணிவதில் ஈர்ப்பு இருக்கிறதா என்பது குறித்து இளைய சமுதாயத்தினர் தெரிவித்த கருத்துகளை பார்க்கலாம்.

நாம் அணியும் ஆடைகளே நமக்கு அடையாளம் தருகின்றன. நமதுகலாசாரத்தைச் சொல்கின்றன.

வேட்டி தினம்

தமிழர்கள் என்பதை வேட்டி, சட்டைகளே வெளிக்காட்டுகின்றன. உலக பாரம்பரியங்களை பொக்கிஷமாக பாதுகாக்கும் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட 'யுனஸ்கோ' அமைப்பு தமிழர்களின் கலாசாரம், பண்பாடு, நாகரிகத்தை நன்கு உணர்ந்து வேட்டிக்கு உலக அங்கீகாரத்தை அளித்து இருக்கிறது. 2016-ம் ஆண்டு அந்த அமைப்புதான் ஜனவரி 6-ந்தேதியை சர்வதேச வேட்டி தினமாக அறிவித்தது.

அதன் விளைவாக ஒவ்வொரு ஆண்டும் இந்த தினத்தில் வேட்டி அணிய வேண்டும் என்ற உணர்வு இளைய தலைமுறையினரிடம் மேலோங்கி வருகிறது. அதற்காக யுனஸ்கோ அமைப்பை பாராட்ட வேண்டும்.

இதில் வேடிக்கை என்னவென்றால்? இங்கிலாந்துக்காரர் சொல்லி வேட்டி சட்டையை களைந்து விட்டு பேண்ட் சூட்டுக்கு மாறிய நாம், அமெரிக்காவில் உள்ள நிறுவனம் சொல்லித்தான் மீண்டும் வேட்டியை அணிய வேண்டியது இருக்கிறதே என்பதுதான்!

கல்வி நிறுவனங்கள்

சரி போகட்டும்! எப்படியேனும் நமது பண்பாடு பாதுகாக்கப்படுவது நல்லதுதானே? அன்றாட பணிக்கு பேண்ட்-சட்டையில் வரும் அரசு ஊழியர்கள் அன்றைய தினம் மட்டும் வேட்டி-சட்டையில் வருவதை வழக்கமாக வைத்துள்ளனர். அதே போன்று சர்வதேச வேட்டி தினத்தன்று மட்டும் கல்லூரி மாணவ-மாணவிகள் பாரம்பரிய உடைகள் அணிந்து வருவதற்கு கல்வி நிறுவனங்கள் பச்சைக்கொடி காட்டி இருக்கின்றன.

வேட்டி அணிந்து புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதோடு சர்வதேச வேட்டி தின கொண்டாட்டம் முடிந்து விடுகிறது. அப்புறம் அந்த வேட்டி, வீட்டு பீரோவின் ஓரத்தில் ஓய்வெடுக்கச் சென்று விடுகிறது.

எனவே சர்வதேச வேட்டி தினம் சம்பிரதாயத்திற்காக கடைப் பிடிக்கப்படுகிறதா? அல்லது இளைய தலைமுறையினரிடம் பாரம்பரிய ஆடைகள் அணிய வேண்டும் என்ற ஈர்ப்பை ஏற்படுத்துகிறதா? என்பது பற்றிய கருத்துகளை இதோ கீழே பதிவிட்டிருக்கிறார்கள் பாருங்களேன்:-

கம்பீரமாக உணர்வேன்

விக்னேஷ்வர பாண்டியன் (தனியார் நிறுவன ஊழியர், தேனி) :- வேட்டி என்பது நமது பாரம்பரிய ஆடை. பண்டிகைகள் மட்டுமின்றி உறவினர் வீட்டு விழாக்களுக்கு செல்லும் போதும் வேட்டி அணிவதை வழக்கமாக வைத்துள்ளேன். ஜீன்ஸ் அணிந்து செல்லும் போது இன்னும் சின்னப் பையனாகவே பார்க்கிறார்கள். வேட்டி அணிந்து செல்லும் போது பெரிய மனுச தோரணை வந்து விடுகிறது. அதில் ஒரு கம்பீரமும் இருக்கிறது. தமிழகத்தின் தட்பவெட்ப சூழலுக்கு ஏற்ற ஆடையாகவும் இது திகழ்கிறது. வேட்டி அணிந்தால் கண்ட இடத்தில் அமர முடியாது. எளிதில் அழுக்காகிவிடும்.

ஹரிஹரன் (கல்லூரி மாணவர், ஊத்துப்பட்டி) :- தமிழர்களின் கலாசாரத்தை பறைசாற்றும் விதமாக தைப்பொங்கல் மற்றும் விசேஷ நாட்களில் வேட்டி அணிவது மிகச்சிறப்பாகும். அதனை அரசு அலுவலர்கள் மற்றும் அனைவரும் கடைபிடிக்க வேண்டும். அப்போது தான் கலாசாரத்தை காக்க முடியும். எனக்கு விேசஷ நாட்களில் வேட்டி அணிவதற்கு மிகவும் பிடிக்கும். வேட்டி அணியும் போது கம்பீரமாக உணர்வேன். கல்லூரிகள், அரசு அலுவலகங்களில் வாரம் ஒரு நாள் பாரம்பரிய உடை அணிய வேண்டும் என்பதை கட்டாயமாக்கலாம்.

வாரம் ஒரு நாள் அனுமதி

ஆகாஷ் (ஐ.டி.ஐ. மாணவர், உப்புக்கோட்டை) :- தமிழர்களின் பாரம்பரியமான வேட்டி அணிவது மகிழ்ச்சியை தரக்கூடியது. ஆண்டுக்கு ஒருமுறை வேட்டி தினம் கொண்டாடி அன்றைய தினம் வேட்டி அணிந்து கொள்வதில் மட்டும் மகிழ்ச்சி நிலைத்து விடாது. தனியார் பள்ளிகளில் வாரம் ஒருமுறை விளையாட்டு சீருடை அணிந்து பள்ளிக்கு மாணவ, மாணவிகள் வருவதற்கு அனுமதி உண்டு. அந்த வகையில் கல்லூரிகளில் வாரம் ஒருநாள் வேட்டி அணிந்து வருவதற்கு அனுமதி கொடுக்கலாம். வேட்டி கட்டுவது கூட ஒரு கலை தான். இப்போது கட்டத் தெரியாதவர்களுக்கு ஓட்டிக் கொள்ளும் வசதியுடன் கூடிய வேட்டி வந்துள்ளது.

சோபியா (கல்லூரி மாணவி, உத்தமபாளையம்) :- தமிழர்கள் தங்களின் பாரம்பரிய ஆடை அணிவதற்கு ஒரு தினம் உருவாக்கி நினைவூட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆண்களுக்கு வேட்டி தினம் ஒன்று ஆண்டுக்கு ஒருநாள் கடைபிடிப்பது போன்று, பெண்களுக்கு சேலை தினம் என்று ஒரு நாளை அறிவித்து விடலாம். அன்றைய தினம் அரசு, தனியார் நிறுவன பணியாளர்கள், கல்லூரி மாணவிகள், பேராசிரியைகள் அனைவரும் சேலை அணிந்து வர அறிவுறுத்தலாம்.

நவநாகரிக ஆடைகள்

நவநாகரிக ஆடைகளை விடவும் பாரம்பரிய உடையான சேலைக்கு எப்போதும் தனி மவுசு உண்டு. சேலை அணியும் போது அதோடு எந்த ஆபரணம் அணிந்தாலும் அழகாக இருக்கும். பெண்கள் பெரும்பாலும் பண்டிகை காலங்களில் சேலை தான் அணிகிறார்கள். ஆண்கள் தான் வேட்டி அணிவதை கூட பேஷனாக கருதும் நிலை உள்ளது. பேஷன் என்ற பெயரில் பாரம்பரியத்துக்கு திரும்புவதும் நல்ல விஷயம் தான்.

சரவணன் (வேட்டி மொத்த வியாபாரி, சக்கம்பட்டி) :- இளைஞர்களிடம் வேட்டி வாங்கும் ஆர்வம் குறைவாகவே உள்ளது. வேட்டி தினத்துக்கு இளைஞர்கள் விலைக்கு வாங்கி கட்டுவதை விடவும், பெற்றோரின் வேட்டியை அணிந்து கொள்வதே அதிகம் உள்ளது. இதனால் வேட்டி விற்பனை பெரிய அளவில் இல்லை. உற்பத்தி செய்த வேட்டிகள் தேக்கம் அடைந்து வருகின்றன. கேரளாவில் வாரம் ஒருமுறை வேட்டி, சேலை அணிய வேண்டும் என்ற விதி உள்ளதால் கல்லூரி மாணவ, மாணவிகள் மத்தியில் பாரம்பரிய உடை மீதான ஈர்ப்பு அதிகம் உள்ளது. அதே நிலைமை தமிழ்நாட்டிலும் வந்தால் வேட்டி, சேலைகள் விற்பனை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதன் மூலம் கைத்தறி, விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மேம்படும். நூல் விலை உயர்ந்துள்ளதால், வேட்டி விலையும் உயர வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

வேட்டி வாரம்

ஜனவரி 6-ந்தேதி சர்வதேச வேட்டி தினம் என்றாலும் தமிழ்நாட்டில் ஜனவரி 1-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை வேட்டி வாரமாக கடைபிடிக்கப்படுகிறது. வேட்டி விற்பனையை அதிகரிக்க ஜவுளி நிறுவனங்கள் கவர்ச்சிகர சலுகைகளை அறிவித்து உள்ளன.

இளைஞர்கள் சிரமமின்றி அணியும் வகையில் ஒட்டிக்கோ கட்டிக்கோ வேட்டி, பாக்கெட் வைத்த வேட்டி என்று வேட்டியிலும் புதுமைகள் புகுத்தப்பட்டு வருகின்றன.

நாம் பாரம்பரிய உடைகளை தினமும் அணியாவிட்டாலும்கூட விழாக்காலங்களிலும் முடிந்தால் வாரத்தில் ஒரு நாளாவது அணிவோம் என்றால் நெசவாளர்கள் மட்டும் அல்ல நமது கலாசாரமும் பாதுகாக்கப்படும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

Related Tags :
மேலும் செய்திகள்