< Back
மாநில செய்திகள்
6-ம் ஆண்டு நினைவு நாள்: ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா மரியாதை
மாநில செய்திகள்

6-ம் ஆண்டு நினைவு நாள்: ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா மரியாதை

தினத்தந்தி
|
5 Dec 2022 2:25 PM IST

ஜெயலலிதாவின் 6ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சென்னை மெரினாவில் உள்ள நினைவிடத்தில் சசிகலா மரியாதை செலுத்தினார்.

சென்னை,

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 6-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. நினைவு தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர். நினைவிடம் அருகில் அமைந்துள்ள ஜெயலலிதா நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. அங்கு வெளியூர்களில் இருந்து வந்த ஏராளமான தொண்டர்கள் ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அ.தி.மு.க.வினர் 4 அணிகளாக தனித்தனியாக வந்து அஞ்சலி செலுத்தினார்கள். அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஏராளமான அ.தி.மு.க. தொண்டர்கள் திரண்டு ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

அதைத்தொடர்ந்து முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். பின்னர் 2 அணியினரும் உறுதி மொழி ஏற்றனர்.

இந்த நிலையில், ஜெயலலிதா 6-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு பேரணியாக வந்து சசிகலா மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

முன்னதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஜெயலலிதா நினைவிடத்தில் தனது ஆதரவாளர்களுடன் வந்து மரியாதை செலுத்தினார்.

மேலும் செய்திகள்